அதிகாரத்துக்காக பாஜக நாட்டையே எரிக்கும்: ராகுல் காந்தி
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதிகாரத்தைப் பிடிக்க மட்டுமே ஆசைப்படுவதாகவும், அவர்கள் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் துயரங்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இளையோர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய சிக்கிம் அரசு!
அப்போது அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதிகாரத்தைப் பிடிக்க மட்டுமே நினைக்கிறது. அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறது. அதிகாரத்துக்காக அவர்கள் மணிப்பூரை எரிப்பார்கள். அதிகாரத்துக்காக அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையுமே எரிப்பார்கள். அவர்களுக்கு மக்களைப் பற்றியும், அவர்களது துயரங்கள் பற்றியும் கவலையில்லை. ஹரியாணா, பஞ்சாப் அல்லது உத்தரப் பிரதேசம், ஒட்டுமொத்த நாட்டையும் விற்பார்கள். அவர்களுக்கு வேண்டியது அதிகாரம் மட்டுமே. இது ஒரு விதமான யுத்தம். ஒரு பக்கம் நாட்டை நேசித்து நாட்டு மக்களுக்காக கவலைப்படும் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், அதிகாரத்தை விரும்புபவர்களுக்கு இது போன்ற எண்ணங்கள் எல்லாம் மனதில் இல்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எந்த ஒரு வலியையும் உணர மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.