அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீட்டிக்கக் கோரிய மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீட்டிக்கக் கோரிய மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பணிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிப்பது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட நிலையில், அவருடைய பணிக் காலத்தை வரும் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதிக்கக் கோரி மத்திய அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவில், ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டுமே எஸ்.கே. மிஸ்ராவின் பதவியை நீட்டிக்கலாம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் 4 நாள்கள் மட்டுமே அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே. மிஸ்ரா பணியில் இருக்க முடியும்.
ஆனால் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டிப்புக் கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க.. சென்னை தீவுத்திடலில் என்னென்ன வரப்போகிறது?
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறையில் எஸ்.கே. மிஸ்ராவைத் தவிர மற்ற அனைத்து அதிகாரிகளும் தகுதியற்றவர்களா? எஸ்.கே. மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லை என்றால், ஒட்டுமொத்த அமலாக்கத் துறையும் செயல்பட முடியாதா? என்று மத்திய அரசுக்கு காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தது. மேலும், எஸ்.கே. மிஸ்ராவின் பணிக்காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, அதன்பிறகு அவரது பணிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான எந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது என்று உத்தரவிட்டுள்ளது.
1984-ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணிகள் (ஐஆா்எஸ்) பிரிவு அதிகாரியான சஞ்சய் குமாா் மிஸ்ரா, வரும் நவம்பா் 18-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் வகையில், மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மூன்றாவது முறை பணி நீட்டிப்பு சட்டவிரோதம்’ என்று அண்மையில் தீா்ப்பளித்தது. அதே நேரம், நிதி நடவடிக்கை பணிக் குழு (எஃப்ஏடிஎஃப்) இந்த ஆண்டில் மேற்கொண்டு வரும் மதிப்பாய்வு பணிகள் எந்தவித பாதிப்புகளின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக, சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பணிக் காலம் ஜூலை 31 வரை மட்டும் நீட்டிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், ‘எஃப்ஏடிஎஃப் மதிப்பாய்வு பணிகளை கருத்தில் கொண்டு சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பணிக் காலத்தை வரும் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதிக்கும் வகையில், தீா்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
நிதி நடவடிக்கை பணிக்குழு என்பது சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கான, பன்னாட்டு அரசுகளிடையிலான அமைப்பாகும்.
அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு 2020-இல் நீட்டிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டிலும் அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநா்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநா்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...