ஒடிசா ரயில் விபத்து இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து: மம்தா பானர்ஜி

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
ஒடிசா ரயில் விபத்து இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து: மம்தா பானர்ஜி
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்த விபத்து தொடர்பாக உண்மையைக் கண்டறிய சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது: இந்த விபத்தின் பின்னணியில் ஏதோ உள்ளது. உண்மை என்னவென்று கண்டறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கண்டிப்பாக உண்மை வெளியில் வந்தாக வேண்டும். ஒரு ரயில் மற்ற ரயில்களின் மீது மோதாமல் இருக்கும் தொழில்நுட்பம் இருந்திருந்தால் இந்த கோர விபத்து நடந்திருக்காது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்கள் மற்ற ரயில்களின் மீது மோதாமல் இருக்க உதவும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். அந்த தொழில்நுட்பத்தின் உதவியால் இதுபோன்ற விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. ரயிலில் பயணம் செய்தவர்களில் அதிகமானோர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு வங்கம் தவிர, கேரளம், பெங்களூரு மற்றும் ஒடிசாவினைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோரமண்டல் விரைவு ரயில் நாட்டின் சிறந்த ரயில்களில் ஒன்று. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து இதுவாகும். 1985 ஆம் ஆண்டு பிகாரில் மிகப் பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது மாவோயிஸ்டுகள் விபத்தினை ஏற்படுத்த முயற்சி செய்தனர். அந்த விபத்துக்கான முயற்சி குறித்து விசாரிக்கும் பொறுப்பு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக இன்று வரை அதில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. 

நாங்கள் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஏற்கனவே 70 ஆம்புலன்ஸ்கள்,40  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலரை அனுப்பியுள்ளோம். விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் பேருந்தின் மூலம் மேற்குவங்கத்துக்கு அழைத்து வரப்பட்டனர். விபத்தில் காயமடைந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்புமாறு நான் ரயில்வே துறையைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com