கர்நாடக மாநிலத்திற்கு அரிசி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கர்நாடகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
ஆனால், கர்நாடக அரசு, கூடுதல் அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கேட்டது. ஆனால், மத்திய அரசோ, மாநில அரசு இதுகுறித்து முன்கூட்டியே தங்களிடம் ஆலோசிக்கவில்லை என்று கூறி கூடுதல் அரிசி வழங்க மறுத்துவிட்டது.
இதனைக் கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநில துணை முதல்வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடக மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்குவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு அரிசி தருவது மத்திய அரசின் கடமை. மத்திய அரசிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்வதற்கு அரசு சார்பில் பணம் வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் கொடுக்கவும் ஒப்புக்கொண்டனர். ஆனால் இப்போது அரிசி வழங்க மறுக்கின்றனர். பாஜகவின் இரட்டை நிலை அரசியலுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். பிற மாநிலங்களில் இருந்து அரிசி வாங்கி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்' என்று தெரிவித்தார்.
எனினும் இத்திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு, அண்டை மாநிலங்களிடம் அரிசி கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.