எகிப்தில் பழமையான மசூதி, பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி 1000 ஆண்டுகள் பழமையான அல்ஹகீம் மசூதி மற்றும் பிரமிடுகளை பார்வையிட்டார்.  
எகிப்தில் பழமையான மசூதி, பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி 1000 ஆண்டுகள் பழமையான அல்ஹகீம் மசூதி மற்றும் பிரமிடுகளை பார்வையிட்டார். 

மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். அப்போது அல்-ஹகீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அங்கிருந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து முதலாம் உலகப் போரில் எகிப்து சாா்பில் போரிட்டு உயிா்த்தியாகம் செய்த 3,799 இந்திய வீரா்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள ஹீலியோபோலிஸ் போா் நினைவிடத்துக்குச் சென்ற பிரதமா் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் உலக அதிசயமான பிரமிடுகளையும் அவர் பார்வையிட்டார். 

அப்போது அந்நாட்டு பிரதமர் முஸ்தாபா உடனிருந்தார். அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, சனிக்கிழமை எகிப்து சென்றடைந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டு அதிபா் அப்தெல் ஃபட்டா எல்-சிசியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பிரதமா் மோடி, பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தினார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடி எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இந்தியப் பிரதமா் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது கடந்த 26 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். எகிப்து அதிபா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட 6 மாதத்துக்குள் பிரதமா் மோடி எகிப்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஜி20 கூட்டமைப்பின் நடப்பாண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், வரும் செப்டம்பரில் தில்லியில் நடைபெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு எகிப்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபா் எல்-சிசி மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com