ராகுலின் கற்பனைக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்: பாஜக

பெகாசஸ் விவகாரத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகள் அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாக வேண்டும் என நினைப்பதை வெளிக்காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.
ராகுலின் கற்பனைக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்: பாஜக
Published on
Updated on
1 min read

பெகாசஸ் விவகாரத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகள் அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாக வேண்டும் என நினைப்பதை வெளிக்காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் கூறியதாவது: ராகுல் காந்தியின் கற்பனைகளுக்கு எல்லாம் நாங்கள் என்ன சொல்ல முடியும். அவர் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டால், நாங்கள் அதனைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம். மக்களும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது தொலைபேசி உரையாடல்களைத் தெரிந்து கொள்ள யார் ஆர்வம் காட்டுவார்கள். 

பெகாசஸ் விவகாரத்தினை உச்சநீதிமன்றம் விசாரித்து முடித்துவிட்டது. உச்சநீதிமன்றம் வலியுறுத்திய போதிலும் பெகசாஸ் விசாரணையின்போது ராகுல் காந்தி அவரது தொலைபேசியினை கொடுக்கவில்லை. அவர் எதற்காகப் பயப்பட வேண்டும். அவரது தொலைபேசியில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது. அவர் ஏன் வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அந்த பிரச்னைகள் நடந்திருக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியை உருவாக்க விரும்புகிறார். இந்தியாவில் உள்ள மக்கள் விழித்துக் கொண்டதால் அவரால் இந்திய மக்களிடம் வாக்கினைப் பெற முடியவில்லை.  

வடகிழக்கில் பாஜக வெற்றி பெற்றுள்ளது பிரிவினைவாத அரசியலுக்கு மிகப் பெரிய அடியாக விழுந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டின் பிரிவினைவாத அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களது நோக்கம் அவர்களது வெறுப்பு பிரசாரங்களின் மூலம் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரை பாஜகவிடம் இருந்து விலக்கியே வைத்திருப்பதாகும். ஆனால், இந்த வெற்றி அவர்களுக்கு மிகப் பெரிய அடியாக விழுந்துள்ளது. பாஜக வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது. வளர்ச்சிக்கு எந்த ஒரு மதமும் கிடையாது. சிறுபான்மையினர் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையே வடகிழக்கில் அதன் வெற்றிக்கு காரணம். பிரதமர் நரேந்திர மோடி வெறும் வார்த்தையாக சொல்பவர் மட்டுமல்ல, அவர் செய்து காட்டுபவர்.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் வயநாடு தொகுதியில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இடதுசாரிகளுடன் ராகுல் காந்தி கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரிவுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றங்களை நிறுத்தி வைப்பதில் ஆர்வம் காட்டுகிறது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்குகள் போன்றன நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


வடகிழக்கு மாநிலங்களின் தேர்தலை சிறிய மாநிலங்களின் தேர்தல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார். இது போன்ற கருத்துகள் காங்கிரஸ் குறித்து மக்களுக்கு புரிய வைக்கிறது. வடகிழக்கில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக காங்கிரஸ் வடகிழக்கு மாநிலங்களை இரண்டாம் தரமாக நடத்தியது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்கில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படுள்ளது என்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, அவர் உட்பட பல அரசியல் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com