இந்தியா ஜனநாயகத்திலிந்து மாறி வருகிறது: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!

தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியா ஜனநாயகத்திலிருந்து விலகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியா ஜனநாயகத்திலிந்து மாறி வருகிறது: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!

தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியா ஜனநாயகத்திலிருந்து விலகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் (மார்ச் 4 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

 மணீஷ் சிசோடியாவுக்கு பிறப்பித்த சிபிஐ காவல் நேற்றுடன் (மார்ச் 4) முடிவடைந்த நிலையில், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 3 நாள்கள் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேலும் 2 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியா ஜனநாயகத்திலிருந்து விலகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம். இந்தியாவில் மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது.

தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்டார். இது அரசியல் சதி. சிசோடியாவின் கைது இந்திய மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிருக்கிறது. அவரது கைதின் மூலம் பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்பதை உலக நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளன.

தில்லியில் வழங்கப்பட்டுள்ள கல்வி வளர்ச்சியின் மூலம் உலக நாடுகளால் நன்கு அறியப்பட்டவர் மணீஷ் சிசோடியா. அவரது கைது உலக நாடுகளை இந்தியாவின் ஜனநாயக மதிப்பின் மீது சந்தேகிக்கச் செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணையானது அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு மென்மையாக நடத்தப்படுகிறது. அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வா சர்மா முன்னதாக காங்கிரஸில் இருந்தார். அவர் மீது மத்திய விசாரணை அமைப்புகள் சாரதா சிட் பண்ட் நிதி வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தன. ஆனால், அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பிறகு அவர் மீதான வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவது போன்றன கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெகுவாக அதிகரித்துள்ளது. அதேபோல இந்த விசாரணை அமைப்புகள் பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்கு விசாரணையை மிகவும் மெதுவாக மேற்கொள்கின்றனர். விசாரணை அமைப்புகள் பாஜகவின் ஒரு அங்கமாக செயல்படுகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் லாலு பிரசாத் யாதவ், சஞ்சய் ரௌத், ஆசாம் கான், நவாப் மாலிக், அனில் தேஷ்முக், அபிஷேக் பானர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களது கைது செய்யப்படும் நேரம் மிகவும் முக்கியம். தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது அரசியல் ஆதாயத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாநிலத்தில் நிர்வாகத்தில் அடிக்கடி தலையிட்டு இடையூறு ஏற்படுத்துகின்றனர். நாடு முழுவதிலும் ஆளுநர் அலுவலகம் தொடர்ந்து அரசியலைமைப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மதிக்காமல் மீறி வருகின்றனர். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை மதித்து நடக்காமல் அரசுக்குத் தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாபின் ஆளுநர்கள் மற்றும் தெலங்கானா, தில்லியின் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை செயல்பட விடாமல் இடையூறு செய்து வருகின்றனர். பாஜக கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல் நடந்து வருகிறது. இதனால், மக்கள் இந்திய அரசியலில் ஆளுநரின் தேவை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதத்தில் பாரதீய ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ், அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஃபரூக் அப்துல்லா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேஜஸ்வி யாதவ் மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com