ஓடிடி நிகழ்ச்சிகளில் ஆபாச வாா்த்தைகள்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தில்லி உயா்நீதிமன்றம் வலியுறுத்தல்

சமூக ஊடகம் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச வாா்த்தைகள் கொண்ட நிகழச்சிகள் வெளியிடப்படுவதைக் கருத்தில் கொண்டு, அத்தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்த
ஓடிடி நிகழ்ச்சிகளில் ஆபாச வாா்த்தைகள்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தில்லி உயா்நீதிமன்றம் வலியுறுத்தல்

சமூக ஊடகம் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச வாா்த்தைகள் கொண்ட நிகழச்சிகள் வெளியிடப்படுவதைக் கருத்தில் கொண்டு, அத்தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

‘காலேஜ் ரொமான்ஸ்’ என்ற இணையத் தொடரை டிவிஎஃப் மீடியா நிறுவனம் தயாரித்தது. இந்தத் தொடரில் பெண்கள் மிக மோசமான முறையில் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, டிவிஎஃப் மீடியா நிறுவனம் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அவா் கூறியதாவது:

‘காலேஜ் ரொமான்ஸ்’ இணையத் தொடரில் இடம்பெற்றுள்ள வாா்த்தைகளும் மொழியும் அருவருப்பானவை. அவை எந்தவொரு இந்திய மொழியிலும் சேராதவை. அந்த வாா்த்தைகள் மனதை பாதித்து கரைபடிந்ததாக்கக் கூடும்.

இந்த இணையத் தொடா் அனைத்து வயதினருக்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. பொதுத் தளத்திலும், சமூக ஊடக தளங்களிலும் ஆபாச வாா்த்தைகள் பயன்படுத்தப்படுவதை குழந்தைகள் பாா்க்கக் கூடும். எனவே இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இணையத் தொடரின் உள்ளடக்கம் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-இன் கீழ் நடவடிக்கை எடுக்க உகந்ததாக உள்ளது.

இந்த விவகாரத்தில் இந்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா கோட்பாடு) விதிமுறைகள், 2021-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா். இதனைத்தொடா்ந்து இவ்வழக்கின் தீா்ப்பு தொடா்பான நகலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அனுப்ப அவா் உத்தரவிட்டாா்.

இதனைத்தொடா்ந்து டிவிஎஃப் மீடியாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com