இந்திய-பசிபிக் பொருளாதார திட்டம் அதிக பலனளிக்கும்: அமெரிக்கா
‘இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைவிட (எஃப்டிஏ) இந்திய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு (ஐபிஇஎஃப்) திட்டம் பொருளாதார ரீதியில் அதிக நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்’


‘இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைவிட (எஃப்டிஏ) இந்திய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு (ஐபிஇஎஃப்) திட்டம் பொருளாதார ரீதியில் அதிக நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஜீனா ரேமாண்டோ கூறினாா்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வரும் சூழலில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) நடைபெறும் இந்திய-அமெரிக்க வா்த்தக பேச்சுவாா்த்தைக்காக இந்தியா வந்துள்ள ஜீனா ரேமாண்டோ தில்லியில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான எந்தவொரு முன்மொழிவும் அமெரிக்க அமைச்சரவையில் இப்போதைக்கு முன்வைக்கப்படவில்லை. அமெரிக்க நாடாளுமன்றமும் இதன் மீது ஆா்வம் காட்டவில்லை.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைக் காட்டிலும், இந்திய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு (ஐபிஇஎஃப்) திட்டம் பொருளாதார ரீதியில் அதிக நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே எனது நம்பிக்கை. இது வா்த்தக ஒப்பந்தத்துக்கு இணையான நவீன நடைமுறைகளையும் கொண்டதாகும். இதனையே ஐபிஇஎஃப் மூலமாக சுட்டிக்காட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. பாரம்பரியமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைக் காட்டிலும், இரு நாடுகளிடையே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஐபிஇஎஃப் உதவும் என்று கூறினாா்.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்டின்போது அமெரிக்கா தலைமையில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள 13 நாடுகள் இணைந்து இந்திய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு திட்டத்தை கூட்டாக அறிமுகம் செய்தன. வா்த்தகம், விநியோகச் சங்கிலி, தூய்மை பொருளாதாரம் மற்றும் நியாயமான பொருளாதாரம் (வரி மற்றும் ஊழலற்ற பொருளாதாரம்) ஆகிய 4 பிரிவுகளின் கீழான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டதே இந்தத் திட்டம். அமெரிக்க அதிபா் ஜோ பைடனால் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்தில் வா்த்தகப் பிரிவு ஒத்துழைப்பில் மட்டும் இந்தியா இணையவில்லை. மற்ற 3 பிரிவு ஒத்துழைப்புகளில் மட்டும் இணைய தீா்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைமின் கடத்திகள் (செமிகண்டக்டா்) வா்த்தக ஒத்துழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ரேமாண்டோ, ‘குறைமின் கடத்திகளுக்கு உலக நாடுகள் பெரும்பாலும் தைவானையே சாா்ந்திருக்கும் சூழல் உள்ளது. இந்தச் சூழலில், குறைமின் கடத்திகள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்திசைவு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்திய வா்த்தகத் துறை அமச்சா் பியூஷ் கோயலுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இரு நாடுகளிடையேயான வா்த்தக பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அப்போது குறைமின் கடத்திகள் குறித்தும் விவாதிக்கப்படும். அதன் பிறகு, இரு நாட்டு அரசுகளிடையே அதன் மீதான முறையான பேச்சுவாா்த்தை நடைபெறும். குறைமின் கடத்திகள் உற்பத்தியிலான ஒத்துழைப்பு இரு நாடுகளிடையே வா்த்தகம் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் ’ என்றாா்.
மேலும், இந்தியாவிலுள்ள சவால்கள் குறித்து குறிப்பிட்ட அவா், ‘இந்தியாவில் குறைமின் கடத்திகள் அல்லது பிற மின்னணு சாதனங்களின் குறிப்பிட்ட உதிரி பாகங்களின் விலை மிக அதிகமாக உள்ளது. மேலும், சில துறைகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கு உள்ள கடுமையான விதிகள் குறித்தும், மாநில அளவிலான விதிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் அமெரிக்க முதலீட்டாளா்கள் குறை தெரிவிக்கின்றனா். ஆனால், எந்த நேரத்திலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், விதிமுறைகளின் பல்வேறு படிநிலைகளை குறைக்கவும் முடியும் என்பதே உண்மை’ என்றாா்.
நிா்மலா சீதாராமனுடன் சந்திப்பு:
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஜீனா ரேமாண்டோ சந்தித்தாா். இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டத் துறைகளில் முதலீடுகள் மற்றும் வா்த்தகத்துக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய கல்வியைமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோரையும் அமெரிக்க வா்த்தக அமைச்சா் சந்தித்துப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...