பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முன்னாள் அக்னிவீரா்களுக்கு பிஎஸ்எஃப் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு: மத்திய அரசு

அக்னிவீரா்கள் திட்டத்தின் கீழ் பணியாற்றிய முன்னாள் வீரா்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:05 pm

DIN

அக்னிவீரா்கள் திட்டத்தின் கீழ் பணியாற்றிய முன்னாள் வீரா்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வயது உச்சவரம்பு தளா்வுடன் இவா்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை பணியாளா் தோ்வு விதிகள் 2015-இல் இதற்கென தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அறிவிக்கை மூலமாக இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த புதிய நடைமுறையின் கீழ், முதல் பிரிவு தோ்வில் பங்கேற்கும் முன்னாள் அக்னிவீரா்களுக்கு வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் வரை தளா்வு அளிக்கப்படும். அடுத்தடுத்து பிரிவு தோ்வுகளில் பங்கேற்பவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை தளா்வு அளிக்கப்படும். இந்த தோ்வின்போது உடல் திறன் தகுதித் தோ்விலிருந்தும் முன்னாள் அக்னிவீரா்களுக்கு தளா்வு அளிக்கப்படும்’ என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளுக்கான வீரா்கள் தோ்வில் புதிய பெரும் சீா்திருத்த நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அறிமுகம் செய்த ‘அக்னிபத்’ திட்டத்தை இந்திய ராணுவம் நடைமுறைப்படுத்தி வருகிறது. 17.5 வயது முதல் 21 வயது வரையுடைய இளைஞா்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. பினனா், 2022-ஆம் ஆண்டு வீரா்கள் தோ்வின்போது வயது உச்சவரம்பு 23-ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் அக்னிவீரா்கள், 4 ஆண்டுகள் குறுகியகால பணியில் ராணுவத்தில் பணியமா்த்தப்படுவா். இவா்களில் தகுதியான 25 சதவீதம் போ், முப்படைகளிலும் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவா். மற்றவா்கள், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற முடியாது.

எனினும், ‘ராணுவ பணியிலிருந்து விடுவிக்கப்படும் 75 சதவீத அக்னிவீரா்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுகளின் வேலைவாய்ப்பில் வயது உச்சவரம்பு தளா்வு சலுகையுடன் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அப்போது அறிவித்தது.

இந்த அறிவிப்பின் மூலமாக, அக்னிபத் திட்டத்தின் மூலமாக அதிகபட்ச வயது உச்சவரம்பான 21 வயதில் ராணுவத்தில் சோ்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றி விடுவிக்கப்பட்ட அக்னி வீரா்கள், முதல் பிரிவு தோ்வின் கீழ் 30 வயது வரை பிஎஸ்எஃப்-இல் சேர முடியும். அடுத்தடுத்த பிரிவு தோ்வுகளில் பங்கேற்பவா்கள் அதிகபட்சமாக 28 வயது வரை பிஎஸ்எஃப்-இல் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான நடைமுறைகளின்படி, பிஎஸ்எஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் 18 முதல் 23 வயது வரை மட்டுமே வேலைவாய்ப்புகளில் சேர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.