நாளை கர்நாடகம் செல்லும் பிரதமர்: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடகத்துக்கு 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 12) செல்ல உள்ளார்.
நாளை கர்நாடகம் செல்லும் பிரதமர்: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடகத்துக்கு 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 12) செல்ல உள்ளார்.

கர்நாடகத்துக்கு செல்லும் பிரதமர் பெங்களூரு-மைசூரு இடையேயான 10 வழிச் சாலையினை தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். மாண்டியா மற்றும் ஹுப்பாளி-தார்வாத் விரைவுச்சாலையினை அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விரைவுச் சாலை ரூ.16 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மதியம் மாண்டியாவில் பல்வேறு முக்கியத் திட்டங்களையும் அவர் தொடக்கி வைக்கிறார்.

அதன் பின்னர், பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விரைவுச் சாலையின் மூலம் பெங்களூரு மற்றும் மைசூருக்கு இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து 75 நிமிடங்களாக குறையும். 118 கிலோமீட்டர் நீளத்துக்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த விரைவுச் சாலை சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டத்துக்காக ரூ.8480 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

மைசூரு-குஷால்நகர் இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதன் தொலைவு 92 கிலோ மீட்டர் ஆகும். இந்தத் திட்டம் ரூ.4,130 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் மைசூரு மற்றும் குஷால்நகர் இடையேயான பயண நேரம் 5 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறையும்.

பின்னர், பிரதமர் நரேந்திர ஐஐடி தார்வாத்தினை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ஐஐடிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.850 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐஐடி தற்போது பி.டெக், எம்.டெக், பிஎஸ்-எம்எஸ், பிஹெச்டி போன்ற படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

உலகின் மிக நீண்ட ரயில்வே நடைமேடையான ஸ்ரீ சித்தாரூத சுவாமிஜி ஹுப்பாளி ரயில்நிலைய நடைமேடையினை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். உலகின் மிக நீண்ட நடைமேடை என்ற இந்த நடைமேடையின் சாதனையை கின்னஸ் சாதனைப் புத்தகம் அண்மையில் அங்கீகரித்தது. இந்த நடைமேடை 1,507  மீட்டர் நீளம் கொண்டது. இந்த நடைமேடை ரூ.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ரூ.520 கோடி மதிப்பிலான ஹுப்பாளி-தார்வாத் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினையும் அவர் தொடக்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளின் தரம் மேம்படுத்தப்படும். நகரத்தின் தரம் எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்படும்.

ஜயதேவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த மருத்துவமனை ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இந்தப் புதிய மருத்துவமனையின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். 

மேலும், இது போன்ற பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

கர்நாடகத்துக்கான பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com