"தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையிடுவதற்கு தமிழகத்தில் மறைமுகத் தடை உத்தரவு ஏதும் மாநில அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்றும், போதிய வரவேற்பு இல்லாததால்தான் திரையரங்குகளில் அப்படம் திரையிடப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள "தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மே 5-ஆம் தேதி வெளியானது.
மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டில் இத்திரைப்படத்திற்கு தடை இல்லாதபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் "தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையிடாமல் திரையரங்க உரிமையாளர்கள் திரும்பப் பெற்றதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "அனைத்துப் பகுதிகளிலும் திரைப்படம் வெளியாகும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் தடை செய்யப்பட்டது ஏன்' என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு மேற்கு வங்க அரசுத் தரப்பில், திரைப்படம் வெளியானால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உளவுத்துறை மூலம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மறைமுகமாக தடை செய்யப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக பதில் தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, வழக்கின் நான்காவது எதிர்மனுதாரரான தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்குரைஞர் சபரிஸ் சுப்ரமணியன் ஆகியோர் மூலம் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி கே. சங்கர் தகவல் அளித்துள்ள அந்த பதில் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவல்களை திரைப்படத் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். உண்மையில், போதிய வரவேற்பு இல்லாததன் காரணமாகவே இத்திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. இதனால்தான், திரையரங்க உரிமையாளர்கள் கடந்த மே 7-ஆம் தேதி இத்திரைப்படத்தை தாமாக திரையிடாமல் நிறுத்திவிட்டனர். இந்தப் படம் ஹிந்தி மொழியில் மட்டுமே உள்ளது.
இந்த திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு பெரும் விமர்சனம் எழுந்தது. சில முஸ்லிம் அமைப்புகள் தரப்பில் இந்த திரைப்படமானது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் "இஸ்லாமோஃபோபியாவை' ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டின. இத்திரைப்படம் மாநிலம் முழுவதும் 19 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மே 5-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தைத் திரையிடுவதை அரசு தடுத்ததாக மனுதாரர்கள் தரப்பில் உரிய ஆவணங்களை காட்டவில்லை. உண்மையில், ஒவ்வொரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கிலும் கூடுதலான போலீஸ் பாதுகாப்பை அரசு அளித்திருந்தது.
இந்தப் படத்துக்கு அரசால் மறைமுகத் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. திரைப்படத்திற்கு விளம்பரம் தேட வேண்டும் என்று நோக்கில் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.