ஆளுங்கட்சியின் கோட்டை! பெரம்பூரில் விஜய் களமிறங்கினால் எப்படியிருக்கும்?
ஆளுங்கட்சியின் கோட்டையாக விளங்கும் பெரம்பூரில் விஜய் களமிறங்கினால் எப்படியிருக்கும்
தவெக தலைவர் விஜய்
கோப்புப்படம்
தவெக தலைவர் விஜய்
கோப்புப்படம்
ஆளும் திமுகவின் கோட்டையாக விளங்கும் பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால், தேர்தல் களம் எப்படியிருக்கும் என்பது குறித்து பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பேச்சுகள் தொடங்கியபோதே, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின.
சென்னையின் பழைமையான தொகுதிகளில் பெரம்பூரும் ஒன்று. கடந்த 2006 பேரவைத் தேர்தல் வரை தனித் தொகுதியாக இருந்தது. 2008-இல் தொகுதி சீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியது. இங்கு திமுக 9 முறையும் மார்க்சிஸ்ட் 3 முறையும் அதிமுக 2 முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது பெரம்பூர் தொகுதி ஆளுங்கட்சியின் கோட்டையாக உள்ளது.
மற்ற தொகுதிகளைப் போலவே இருந்த பெரம்பூர் தொகுதிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் விஜய் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதுதான் கூடுதல் கவனம் கிடைத்தது.
இதையடுத்தே, தவெக தலைவர் விஜய் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் அவர் ஒரு பங்களாவை வாங்கியிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன. அது உறுதி செய்யப்படவில்லை. அது வேறுகதை.
பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதும் மும்முரமாகியிருக்கிறது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தற்போது பாமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் இளம்தலைமுறையினர் அதிகம் என்று தரவுகள் கூறப்படுகிறது. அதாவது அங்குள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 75,000 பேர் இளம்தலைமுறை வாக்காளர்கள். இங்கு, விஜய்யின் தவெக கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக 45000 பேர் இருக்கிறார்கள். இந்த 75 ஆயிரம் பேரில்தான் இந்த 45 ஆயிரம் பேரும் இருக்கிறார்களா, 45 ஆயிரம் பேருக்கும் வாக்குரிமை இந்தப் பகுதியில் உள்ளதா? 75 ஆயிரம் பேரை மட்டுமே நம்பி விஜய் இந்தத் தொகுதியில் நிற்க முடியுமா? என்பதெல்லாம் தவெகவினர்தான் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள, பல சமூகங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியான பெரம்பூர் திமுகவின் கோட்டையாக உள்ளது. இங்கு திமுக 9 முறை வென்றுள்ளது. கடந்த 2019 இடைத் தேர்தலில் திமுகவின் ஆர்டி சேகர் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2021 தேர்தலில் 1.05 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக களமிறங்குகிறது. எனவே, இந்த முறை திமுக கூட்டணியில், பெரம்பூர் தொகுதி சிபிஎம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படுமா? சபாஷ் சரியான போட்டி என்பதைப் போல உருவாக்க திமுக நேரடியாகக் களமிறங்குமா? என்பது மட்டுமே இப்போது விடை தேடப்படும் கேள்வியாக உள்ளது.
அதிமுக கூட்டணியில், பாமக தரப்பில் சென்னையில் தங்களுக்குத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளில் பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரம்பூர் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் பாமக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...