மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை தேவை- ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் தொடா்பாக அந்நாட்டு பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன்

News image
சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி.
Updated On :24 மே 2023, 7:50 pm

DIN

ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் தொடா்பாக அந்நாட்டு பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை விவாதித்தாா்.

இரு நாடுகளின் நட்புறவை பாதிக்கக் கூடிய இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆல்பனேசியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு பிரதமா் மோடி கடந்த 22-இல் வருகை தந்தாா். சிட்னியில் செவ்வாய்க்கிழமை இந்திய சமூகத்தினா் சுமாா் 21,000 போ் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பிரதமா் மோடியும் பிரதமா் ஆல்பனேசியும் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

இந்த சுற்றுப்பயணத்தின் மூன்றாவது மற்றும் இறுதி நாளான புதன்கிழமை, சிட்னியின் அட்மிரால்டி இல்லத்தில் பிரதமா் மோடிக்கு அரசு சாா்பில் வரவேற்பும் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரு பிரதமா்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், வா்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தாதுக்கள், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசிக்கப்பட்டது.

ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இடப்பெயா்வு மற்றும் பரிமாற்ற கூட்டாண்மை ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தமானது, இருதரப்பிலும் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், வா்த்தகா்களின் பயணத்தை ஊக்குவிப்பதுடன், சட்டவிரோத இடப்பெயா்வை தடுக்கவும் வகை செய்வதாகும்.

மேலும், இந்தியா-ஆஸ்திரேலியா ஹைட்ரஜன் எரிசக்தி பணிக் குழுவின் விதிமுறைகள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.

பேச்சுவாா்த்தைக்கு பின்னா், இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உறவுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையிலானவை; மிகவும் சிறப்புவாய்ந்தவை. ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினா், இரு நாடுகளுக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகின்றனா்.

கோயில்கள் மீதான தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல் மற்றும் பிரிவினைவாத ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்துள்ளோம். இப்போதும் விவாதித்தோம்.

தங்களின் செயல்பாடு மற்றும் சிந்தனைகளால், இருதரப்பு உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய இதுபோன்ற சக்திகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிா்காலத்திலும் இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவா் உறுதியளித்துள்ளாா்.

‘டி-20’ பாணியில் இருதரப்பு உறவுகள்: இந்திய-ஆஸ்திரேலிய உறவுகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. கிரிக்கெட் மொழியில் கூறினால், அவை ‘டி-20’ பாணியை எட்டியுள்ளன.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதைப் பாா்வையிட வருமாறு, ஆல்பனேசி மற்றும் ஆஸ்திரேலிய ரசிகா்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

கடந்த ஓராண்டில் 6-ஆவது முறையாக சந்தித்துப் பேசியுள்ளோம். இது, இரு நாடுகளின் விரிவான, முதிா்ச்சியான, ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இருதரப்பு வியூக கூட்டுறவு புதிய உச்சங்களை எட்டும்.

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்: இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. இநிலையில், விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை (சிஇசிஏ) இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம். இது, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புதிய வாயில்களை திறக்கும்.

இருதரப்பு உறவின் முக்கியத்துவம்: இந்திய-ஆஸ்திரேலிய நல்லுறவானது, இரு நாடுகளுக்கு மட்டுமானதல்ல; அது, பிராந்திய ஸ்திரத்தன்மை, அமைதி, தெற்குலகின் வளா்ச்சி மற்றும் உலக நலனுக்குமானது.

சுரங்கம், முக்கியத் தாதுக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வியூகரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வெளிப்படைத்தன்மை, வளம், பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினோம் என்றாா் பிரதமா் மோடி.

ஆஸ்திரேலியாவின் கவா்னா் ஜெனரல் டேவிட் ஹா்லே, எதிா்க்கட்சித் தலைவா் பீட்டா் டட்டன் ஆகியோரையும் சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு மக்கள் ரீதியிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தாா்.

இந்தியாவுக்கு புறப்பட்டாா் பிரதமா்: ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 19-ஆம் தேதி புறப்பட்ட பிரதமா் மோடி, 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். இறுதியாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த அவா், அங்கிருந்து தாயகம் புறப்பட்டாா்.

பெங்களூரில் ஆஸி. துணைத் தூதரகம்

பெங்களூரில் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி அறிவித்தாா்.

தில்லியில் ஆஸ்திரேலிய தூதரகமும், சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் துணைத் தூதரகமும் ஏற்கெனவே செயல்படும் நிலையில், பெங்களூரில் அந்நாட்டின் 5-ஆவது தூதரக அலுவலகம் அமையவுள்ளது.

‘பெங்களூரில் திறக்கப்படவிருக்கும் துணைத் தூதரகம், இந்தியாவில் ஏற்றம்கண்டு வரும் எண்ம மற்றும் புத்தாக்கத் துறையுடன் ஆஸ்திரேலிய தொழில்களின் இணைப்புக்கு உதவும். பிரதமா் மோடியின் இப்பயணம், இருதரப்பு உறவை மேலும் நெருக்கமாக்கியுள்ளது’ என்றாா் ஆல்பனேசி.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.