கலவரத்தால் இலங்கை போல மாறிய மணிப்பூர்: விண்ணைத் தொட்ட விலை

மணிப்பூரில் நேரிட்ட கலவரத்தால் பலர் உயிரிழந்து, கடைகள், வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைத் தொட்டிருக்கின்றன.
கலவரத்தால் இலங்கைப் போல மாறிய மணிப்பூர்
கலவரத்தால் இலங்கைப் போல மாறிய மணிப்பூர்

குவகாத்தி: மணிப்பூரில் நேரிட்ட கலவரத்தால் பலர் உயிரிழந்து, கடைகள், வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைத் தொட்டிருக்கின்றன.

இது மட்டுமல்லாமல், எரிபொருள்களான எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகளும் அங்கு விலை அதிகரித்துள்ளன.

தற்போது கலவரம் மூண்ட பகுதிகளில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் நேரிட்டிருப்பதால் விலை உயர்வடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கள்ளச் சந்தையில் ஒரு சமையல் எரிவாயு உருளை ரூ.2,000 என்ற அளவிலும், பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.250 என்ற அளவிலும் விற்பனையாகிறது. அதுமட்டுமின்றி, அரிசி, காய்கறிகள், பழங்களின் விலைகளும் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதனால், அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

ஏற்கனவே கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், ஊரடங்கு காரணமாக மேலும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. அவசரத்துக்கு நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் கள்ளச்சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 வாங்கித்தான் வாகனத்தை இயக்கும் நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

உணவு பொருள்களின் விலைகள் அனைத்தும் இரண்டு மடங்காகிவிட்டன். கடைகள் மூடியிருப்பதால் மக்களால் எதையும் வாங்க முடியவில்லை. கள்ளச்சந்தையில் அதிக பணம் செலவழித்துவாங்க முடிந்தவர்கள் மட்டுமே வாங்குகிறார்கள். ஏழைகள் வாங்க இயலாமல் தவிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா். அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா்.

இந்தச் சூழலில், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, 10 மலைப் பகுதி மாவட்டங்களில் பழங்குடியின மாணவா் அமைப்பு சாா்பில் கடந்த வாரம் பேரணி நடைபெற்றது. அப்போது, சுராசந்த்பூரில் மைதேயி சமூகத்தினா் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் கடும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தகவல் பரவியதும், மாநிலம் முழுவதும் இரு சமூகங்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையை ஒடுக்க ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இரு சமூகங்களையும் சோ்ந்த 9,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வன்முறையாளா்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல், மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், வன்முறையில் இதுவரை 54 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com