ஆப்பிள் எச்சரிக்கை குறுஞ்செய்தி: மக்களவைத் தலைவருக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்!

ஆப்பிள் எச்சரிக்கை குறுஞ்செய்தி குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு எங்களை சட்டவிரோதமாகக் கண்காணிப்பது அடிப்படை உரிமைகள் மீதான மிக மோசமான தாக்குதல் என்று ஆப்பிள் எச்சரிக்கை குறுஞ்செய்தி குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார். 

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி,  மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர், ராகுல் சத்தா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் ஆப்பிள் செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில்,  'உங்கள் கைபேசி மீது தாக்குதல் நடக்கலாம், அதில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளது. 

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் செல்போன் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய அமைச்சரும் பேசிய நிலையில் அதையடுத்து ஆப்பிள் நிறுவனமும் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா, மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், 'புலனாய்வு அமைப்புகளுக்குப் பயன்படுத்தும் மென்பொருளைப் பயன்படுத்தி அரசு சட்டவிரோதமாகக் கண்காணிப்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீதான மிக மோசமான தாக்குதலாகும்.

நான் உள்பட மக்களவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. அதில் நாங்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மொபைல்போனில் உள்ள தரவுகள், தகவல்தொடர்புகள், கேமரா உள்ளிட்டவற்றை அணுக அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர்.

2019-2021 காலகட்டத்தில் இதேபோன்று எதிர்க்கட்சிகளின் மொபைல்களை ஹேக் செய்ய பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இப்போதைய எச்சரிக்கை செய்தி இரட்டிப்பு அதிர்ச்சியைத் தருகிறது. பெகாசஸ் குறித்து  எதிர்க்கட்சிகள் அவையில் எழுப்பிய போதிலும் விவாதத்திற்கு அனுமதிக்கப்படவில்லை, உறுதியான அறிக்கையை யாரும் தாக்கல் செய்யவில்லை. மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, நாங்கள் எங்கள் கடமைகளைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும். இந்த அடிப்படை உரிமை மீறலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து மக்களவைத் தலைவர் விளக்கம் பெற்றுத் தர தீவிரத்தன்மையுடன் இந்த விஷயத்தைக் கையாள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com