அம்பேத்கரை அவரது வாழ்நாள் முழுக்க அவமானப்படுத்தியது காங்கிரஸ் - அமித் ஷா

காங்கிரஸ், சட்ட மாமேதை அம்பேத்கரை அவரது வாழ்நாள் முழுக்க அவமானம் மட்டுமே செய்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார். 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், சட்ட மாமேதை அம்பேத்கரை அவரது வாழ்நாள் முழுக்க அவமானம் மட்டுமே செய்துள்ளது என மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார் . 

பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 'காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கக்கூடாது என்பதை உறுதி செய்தது. அம்பேத்கரை பாராளுமன்றத்திற்குள் வராமல் தடுக்க பல சதிகளைச் செய்தது.

ஆனால் பா.ஜ.க அம்பேத்கரின் நினைவாக லண்டனில் நினைவகம் ஒன்றினை நிறுவியுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை(ராம் நாத் கோவிந்த்) ஜனாதிபதியாக்கிய பெருமையும் பா.ஜ.கவையே சேறும்' எனக் கூறினார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை மத்திய பிரதேசம் வறுமையான இருள் சூழ்ந்த மாநிலமாகவே இருந்தது. பா.ஜ.கவின் டபுள்-என்ஜின் ஆட்சியின் மூலம் இம்மாநிலத்தை ஒப்பிட்டுப்பார்க்க முடியாத உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் எனத் தெரிவித்தார் அமித் ஷா.

பா.ஜ.க நாடுமுழுதும் பட்டியிலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வழங்கியுள்ளது. ஆனால் இன்று மரியாதைக்குரிய அம்பேத்கரின் புகைப்படத்துடன் காங்கிரஸ் வலம் வந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தன் ஆட்சியில் தங்கள் பைகளை நிறைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்ததே தவிர பா.ஜ.க-வைப்போல் மக்கள் நலனுக்காக ஒரு நாளும் பாடுபட்டதில்லை.' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர் ‘கமல் நாத் தைரியமிருந்தால் இதற்கு பதில் சொல்லட்டும், 2002ல் அவர் மத்திய பிரதேசத்தை விட்டுச்செல்லும்போது பட்ஜெட் வெறும் 23,000கோடி மட்டுமே, இப்போது பட்ஜெட் 3,14,000 கோடியாகியுள்ளது. இது பா.ஜ.கவின் 18 ஆண்டுகால ஆட்சியால் மட்டுமே சாத்தியமானது’ என்றும் கூறினார்.

மேலும், 'ஓட்டு போடுவதற்கு முன்னர் இவையனைத்தையும் யோசித்துப்பார்த்து முடிவெடுங்கள். உங்களின் ஒரு ஓட்டு வரும் ஐந்து ஆண்டுகால ஆட்சியை யாருக்குத் தரப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்யப்போகிறது. தன் ஆட்சிகாலத்தில் பா.ஜ.க எப்படி விவசாயிகள், தலித் மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடி மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளது என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com