நச்சாக மாறிவரும் தில்லிக் காற்று - நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக தில்லி அரசு பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை அளித்துள்ளது. 
மாசுபட்டக் காற்றால் சூழப்பட்டுள்ள தில்லி
மாசுபட்டக் காற்றால் சூழப்பட்டுள்ள தில்லி

தலைநகரில் காற்றில் ஏற்பட்டுவரும் வரும் மிக மோசமான மாசுபாட்டின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காற்று மாசு காரணமாக நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க உத்தரவிட்டிருந்தார். 

 6 முதல் 12 வகுப்புகளுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி  தெரிவித்துள்ளார்.

தில்லியில் தொடர்ந்து ஆறாவது நாளாக நச்சுப்புகை மூட்டம் நீடித்துவருகிறது. காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதற்கு இரவில் நிலவும் மிதமான காற்றோட்டமும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. 

 தில்லி, மாசுக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், காற்றின் தரம் 450 புள்ளிகளைத் தாண்டினால், அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருந்தது. இப்போது காற்றின் தரம் 460 புள்ளிகளைத் தொட்டுள்ளதால், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், கட்டுமானப்பணிகள் என காற்றை மேலும் மாசுபடுத்தக்கூடிய அனைத்து காரணிகளையும் நிறுத்தும் அவசரகால பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 

சுவாச மண்டலத்திற்குள் ஆழமாகச் சென்று உடல்நலப் பிரெச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய மிக நுண்ணிய துகள்கள், தில்லியின் மாசுபட்டக் காற்றில் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அரசால் பரிந்துரைக்கப்பட்ட நுண்துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் ஆகும். ஆனால் இந்த துகள்கள் தில்லியின் பல இடங்களில் 7 முதல் 8 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் ஒரு கனமீட்டருக்கு வெறும் 5 மைக்ரோகிராம் மட்டுமே இந்த நுண்ணிய துகள்கள் இருக்கலாம் என பரிந்துரைக்கிறது. அதன்படி பார்த்தால் தில்லியின் மாசுபட்டக் காற்றில் 80 முதல் 100 விழுக்காடு அதிகமாக இந்த துகள்கள் காணப்படுகின்றன. 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைப்படி காற்றின் தரமானது 100 புள்ளிகளுக்குள் இருப்பதே நல்லது. இப்போது தில்லியின் காற்றின் தரம் 460 புள்ளிகளை எட்டியுள்ளது. 

இந்த தொடர் மாசுபாட்டிற்கு தில்லியின் வெப்பநிலை படிப்படியாக குறைந்துவருவதும், மிதமான காற்றோட்டமும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பது அதிகரித்திருப்பதுவுமே காரணங்களாக கூறப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com