பனாரஸ் பல்கலை. மாணவர்கள் மோதல்: 49 பேர் மீது வழக்குப் பதிவு!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏபிவிபி அமைப்பினர் அளித்த புகாரின்படி 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பனாரஸ் பல்கலை. மாணவர்கள் மோதல்: 49 பேர் மீது வழக்குப் பதிவு!

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மோதலின்போது ஜாதிவெறிக் கருத்துகளைக் கூறி தாக்குதல் நடத்தியதாக 49 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக நுழைவாயில் இரண்டில் ஏற்பட்ட மோதலின் போது இந்து மதத்தை இழிவுபடுத்துதல் மற்றும் ஜாதிவெறிக் கருத்துக்களைப் பயன்படுத்தியதாக ஏபிவிபி அமைப்பினர் குற்றம்சாட்டிய 49 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் பகத் சிங் சத்ரா மோர்ச்சா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை இங்கு மோதலில் ஈடுபட்டதால், காவல்துறையினரை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏபிவிபியின் அலுவலகப் பணியாளர்களின் கூற்றுப்படி, பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் அருகே இந்த வார தொடக்கத்தில் துன்புறுத்தப்பட்ட ஐஐடி பெண் மாணவிக்கு நீதியை உறுதி செய்ய அந்த அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதாகவும், ஏஐஎஸ்ஏ மற்றும் பிசிஎம் உறுப்பினர்கள் அங்கு வந்து மோதலை தொடங்கினர் என்றும் ஏபிவிபி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மோதலைத் தொடர்ந்து ஏபிவிபி உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை அடிதடியில் ஈடுபட்ட 17 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 32 பேர் மீது லங்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லங்கா எஸ்எச்ஓ சிவகானத் மிஸ்ரா தெரிவித்தார். எப்ஐஆரில் இந்து மதத்தை இழிவுபடுத்துதல், மத பகைமை பரப்புதல், தாக்குதல், ஜாதிவெறி கருத்துகளைப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகள் பதியப்பட்டுள்ளன.

ஏபிவிபி அமைப்பின் பனாரஸ் பல்கலைக்கழகப் பிரிவு தலைவர் அபய் பிரதாப் சிங் கூறுகையில், “சமீபத்தில் ஐஐடி-பிஎச்யூ வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் "வளாகத்தை பிரிக்கும்" முடிவுக்கு எதிராகவும் ஏபிவிபி போராட்டம் நடத்தியது. அப்போது ஏஐஎஸ்ஏ மற்றும் பகத் சிங் சத்ரா மோர்ச்சா அமைப்பினர் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களைத் தாக்கினர்" என்று தெரிவித்தார்.

ஏபிவிபி அமைப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்த பகத்சிங் சத்ர மோர்ச்சா அமைப்பினர், “அவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையற்றது. வன்முறை செய்ததே ஏபிவிபி அமைப்பினர்தான்” என்று கூறினர்.

முன்னதாக, நவம்பர் 1 அன்று இரவில் ஒரு மாணவி ஐஐடி வளாகத்திற்குள் நடந்து சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அந்த மாணவியை இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாணவியை தவறான கோணங்களில் விடியோ எடுத்து வைத்துக்கொண்ட அவர்கள் இதை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

இதுபோன்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடப்பதாக குற்றம் சாட்டிய மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதைத் தொடர்ந்தே இந்த மோதல் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி அமைப்பானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com