மத்திய அமைச்சர் மகனின் விடியோ குறித்து ஊடகங்கள் எப்போது விவாதிக்கும்?: சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி!

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திரசிங் தோமர் பேரம் நடத்தியது தொடர்பாக வெளியான விடியோ குறித்து எப்போது விசாரணை நடத்துவீர்கள் என பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் மகனின் விடியோ குறித்து ஊடகங்கள் எப்போது விவாதிக்கும்?: சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி!

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திரசிங் தோமர் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக வெளியான விடியோ குறித்து எப்போது விசாரணை நடத்துவீர்கள் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பினார். 

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை நவம்.17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமர் சிலரிடம் நூற்றுக்கணக்கான கோடிகள் பேரம் பேசியதாக சமீபத்தில் விடியோ வெளியானது.

இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகனும், வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளருமான தேவேந்திர சிங் தோமர் தொடர்புடைய மூன்று விடியோக்கள் இதுவரை வெளியாகி உள்ளன.

10,000 கோடி ரூபாய் என்பது விளையாட்டாக உள்ளதா? எந்த ஆதாரமும் இன்றி என் மீது நூறு கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தி சோதனையிட்டீர்கள். இப்போது பாஜக மத்திய அமைச்சரின் மகன் மீதான பத்தாயிரம் கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டை யார் விசாரிப்பார்? எப்போது இதன் மீது விசாரணை நடத்துவீர்கள்? ஊடகங்கள் எப்போது இதுகுறித்து விவாதங்கள் நடத்தும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

மேலும், “நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமருடன் பேசியவர் அதனை ஒத்துக் கொண்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர சிங் தோமர் கஞ்சா பயிரிடுவதற்காக வெளிநாட்டில் நூறு ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளார்.” என்று பூபேஷ் பகேல் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது மகன் தேவேந்திர சிங் தோமர் தொடர்பான பொய்யான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது எதிர்க்கட்சிகளின் சதி. தேர்தல் நேரத்தில் மக்களை இதன்மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர்.” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், “விடியோ பொதுவெளியில் இருக்கிறது. இதில் அவர் சதி செய்தார், இவர் சதி செய்தார் என்று சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேசநலன் தொடர்பான முக்கியமான விவகாரத்தில் பாஜகவின் தேசியத் தலைவர்கள் ஒருவர்கூட வாய்திறக்கவில்லை. பாஜகவினருக்கு நாட்டு நலனை விட தங்களின் சொந்த நலனே முக்கியம்.” என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com