ம.பி. பாஜக வேட்பாளர் கார் மோதி காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு: திக்விஜய் சிங் போராட்டம்

மத்தியப் பிரதேச தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் பாஜக வேட்பாளரின் கார் மோதி உயிரிழந்த காங்கிரஸ் தொண்டரின் சடலத்துடன் காவல்நிலையம் வந்து திக்விஜய் சிங் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திக்விஜய் சிங்
திக்விஜய் சிங்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் பாஜக வேட்பாளரின் கார் மோதி உயிரிழந்த காங்கிரஸ் தொண்டரின் சடலத்துடன் காவல்நிலையம் வந்த திக்விஜய் சிங் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்.17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவியது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியாவால் காங்கிரஸ் தொண்டர் சல்மான் கான் கார் ஏற்றிக் கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. 

அதனையடுத்து உயிரிழந்த சல்மான் கானின் சடலத்தை எடுத்துக் கொண்டு கஜுராஹோ காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை வந்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் நேற்று (நவம்.18) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் திக்விஜய் சிங் கூறியதாவது, “தேர்தலுக்கு முந்தைய நாள் நள்ளிரவில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துள்ளனர். இதுபற்றிய தகவலறிந்த காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் அங்கு சென்று அதனைத் தடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியாவின் கார் காங்கிரஸ் தொண்டர் சல்மான் கான் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “உயிரிழந்த காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கும். அவர் மீது கார் ஏற்றியவர்கள் விரைந்து கைது செய்யப்படவேண்டும் என்று நேற்று முதல் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் வலியுறுத்தி வருகிறேன். கொலைவழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்னும் யாரையும் கைதுசெய்யவில்லை.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியா மற்றும் சில பாஜகவினர் மீது ஐபிசி 302, 307, 147, 149, 294 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி, “தேர்தல் மோதலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கஜுராஹோ காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து 20 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com