உலக மீன்வள மாநாட்டில் குஜராத் மாநிலத்திற்கு என மாநில மீன் அறிவிப்பு!

குஜராத்தில் நடைபெற்ற உலக மீன்வள மாநாட்டில் குஜராத் மாநிலத்திற்கு என மாநில மீனை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல்.
உலக மீன்வள மாநாட்டில் குஜராத் மாநிலத்திற்கு என மாநில மீன் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read



2023 உலக மீன்வள மாநாட்டில் 'கோல்' வகை மீனை குஜராத் அரசின் மாநில மீனாக அறிவித்தார் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல்.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகளாவிய மீன்வள மாநாடு 2023-ஐ குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது, “பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் குஜராத் சிறந்த மாநிலமாக மாறியுள்ளது. மாநிலத்தின் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

மாநிலத்திற்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். இன்று 'கோல்' வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம். கோல் மீன் குஜராத் ஏற்றுமதி செய்யும் விலையுயர்ந்த மீன்வகைகளில் ஒன்றாகும். இதனை மாநில மீனாக அறிவிப்பதால் இதைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும்.” என்று கூறினார்.

பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய மீன்வளத்துறை உற்பத்தியாளர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, கூட்டு முயற்சிகளை வளர்ப்பது மற்றும் இந்திய மீன்வளத் துறையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், இரண்டு நாள் உலகளாவிய மீன்வள மாநாடு 2023 குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று (நவ.21) நடைபெற்றது.

மேலும் பேசிய அவர், “நாட்டிலேயே மிக நீளமான 1,600 கிலோமீட்டர் கடற்கரையை குஜராத் மாநிலம் கொண்டுள்ளது. கடல் மீன் உற்பத்தியில் குஜராத் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. 5000 கோடி ரூபாய்க்கு மேல் மீன்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் மொத்த மீன் ஏற்றுமதியில் குஜராத்தின் பங்களிப்பு 17 சதவீதம். முதல் உலக மீன்வள மாநாட்டை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமான மாநிலம் குஜராத் ஆகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை கட்டியெழுப்புவதில் நீலப் பொருளாதாரம் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நமது நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த துறையுடன் தொடர்புடையவர்கள். ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தனி அமைச்சகம் கூட இல்லை.

மோடி பிரதமரான பின்புதான் நாட்டிலேயே முதன்முறையாக மீன்வளத்துறை அமைச்சகம் தொடங்கப்பட்டு, அதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டு மீன் உற்பத்தி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது" என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com