'ராகுல் காந்தி ஒரு ட்யூப்லைட்' - பாஜக வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

'ராகுல் காந்தி ஒரு ட்யூப்லைட்' என பாஜக வெளியிட்டுள்ள போஸ்டரால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
ராகுல் காந்தியை விமர்சித்து பாஜக வெளியிட்டுள்ள போஸ்டர்.
ராகுல் காந்தியை விமர்சித்து பாஜக வெளியிட்டுள்ள போஸ்டர்.

'ராகுல் காந்தி ஒரு ட்யூப்லைட்' என பாஜக வெளியிட்டுள்ள போஸ்டரால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திரைப்பட போஸ்டர் போல வடிவமைக்கப்பட்டுள்ள அதில், "காங்கிரஸ் வழங்கும்... ராகுல் காந்தி நடிக்கும்.. 'ட்யூப்லைட்' படம் சீனாவில் தயாரிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில், ராகுலின் கழுத்தில் ஷூக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. 

இந்த வாரம் ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமா் நரேந்திர மோடியை ‘அதிருஷ்டமில்லாதவா்’, ‘கொள்ளையடிப்பவா்’, ‘பெரும் தொழிலதிபா்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவா்’ எனப்பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்குத் தோ்தல் ஆணையம் நவ.23 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த நோட்டீஸுக்கு இன்று (நவ.25) மாலைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பாஜக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. பாஜகவினர் பலரும் இந்த போஸ்டரை வெளியிட்டு ராகுல் காந்தியை விமர்சித்து வருகின்றனர். 

மற்றொரு பக்கம், காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

'ராகுல் காந்தி ட்யூப்லைட்தான், அவர் வெளிச்சத்தை பரப்புகிறார். அதைத்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார்' என்றும் 'அவர் எதிர்காலத்தின் வெளிச்சம்' என்றும் 

'பிரதமர் மோடியை அதிர்ஷ்டமில்லாதவர் என்று ராகுல் கூறியதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்றால் பாஜகவின் இந்த போஸ்டருக்கு என்ன நடவடிக்கை?' என்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ராகுல் காந்திக்குப் பதிலாக அந்த போஸ்டரில் மோடியின் படத்தை மாற்றியும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்

முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு கூட்டத்தொடரின்போது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தியை ட்யூப்லைட்டுடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.

'நான் கடந்த 30-40 நிமிடங்களாக பேசிக்கொண்டிருந்தேன்.  ஆனால் வெளிச்சம் இங்கு வருவதற்கு இவ்வளவு நேரம் ஆனது. இங்கு பல டியூப்லைட்கள் இப்படித்தான் இருக்கின்றன. 

இன்னும் 6 மாதத்தில் இளைஞர்கள் மோடியை குச்சியால் அடிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். சூர்ய நமஸ்காரம் செய்வதை அதிகப்படுத்தி என் முதுகு பல அடிகளைத் தாங்கும் அளவுக்கு வலிமையாக்க முடிவெடுத்துள்ளேன்' என்று பேசினார்.

பிரதமர் மோடி கூறியதை வைத்து, பாஜக வெளியிட்டுள்ள இந்த போஸ்டரால் தற்போது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com