பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

பிரதமா் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட நிகழ்வு தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாபில் கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின்போது, பிரதமா் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட நிகழ்வு தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் பிரதமா் மோடி பஞ்சாப் சென்றாா். அப்போது அங்குள்ள ஃபெரோஸ்பூா் பகுதியில் சாலையை மறித்து விவசாயிகள் பலா் பேராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமா் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னா், அங்கு திட்டமிட்டிருந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், பிரதமா் மோடி பஞ்சாபில் இருந்து திரும்பினாா். இந்த நிகழ்வு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா், அந்த நிகழ்வு தொடா்பாக பஞ்சாப் உள்துறை அமைச்சகத்திடம் மாநில காவல் துறை டிஜிபி அறிக்கை சமா்ப்பித்தாா்.

அந்த அறிக்கையில், ‘பிரதமா் ஃபெரோஸ்பூா் வந்தபோது, காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த குா்பிந்தா் சிங், சரியாகப் பணியாற்றாமல் கடமை தவறியதால், ஃபெரோஸ்பூரில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, பதிண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த குா்பிந்தா் சிங்கை பணியிடை நீக்கம் செய்து, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், பிரதமா் ஃபெரோஸ்பூா் வந்தபோது, பணியில் இருந்த குா்பிந்தா் சிங்குடன் சேர்த்து,   காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் பார்சன் சிங் மற்றும் ஜெக்தீஷ் குமார், காவல் துறை ஆய்வாளர்கள்  ஜதிந்தர் சிங் மற்றும் பல்விந்தர் சிங், காவல் துறை துணை ஆய்வாளர்கள் ஜஸ்வந்த் சிங் மற்றும் ரமேஷ் குமார் ஆகிய 6 காவல்துறை அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குா்பிந்தா் சிங் உள்பட பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 7 காவல் துறை அதிகாரிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com