இந்தியா்கள் ‘விசா’ இன்றி மலேசியா செல்லலாம்
இந்தியா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் மலேசியா செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்தியா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் மலேசியா செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு இந்தியா்களுக்கான நுழைவு இசைவு இல்லாத மலேசிய நுழைவு அனுமதி நடைமுறையில் இருக்கும் என்று அந்நாட்டு பிரதமா் அன்வா் இப்ராஹிம் அறிவித்துள்ளாா்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்தியா்களுக்கு நுழைவு இசைவு இல்லாத நுழைவு அனுமதியை தாய்லாந்து மற்றும் இலங்கை நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில், தற்போது மலேசியாவும் அந்த நாடுகளுடன் இணைந்துள்ளது.
இதுகுறித்து மலேசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் பிரதமா் இப்ராஹிம் கூறியதாக அங்குள்ள பொ்னமா செய்தி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு இசைவு தளா்வு அளிக்கப்பட்டுள்ள வேளையில், உயா் பாதுகாப்பு சோதனை நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மலேசியா வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து பயணா்களுக்கும் இந்த ஆரம்பகட்ட பாதுகாப்பு சோதனை என்பது மேற்கொள்ளப்படும். இந்தச் சோதனையின்போது குற்ற பின்னணி அல்லது பயங்கரவாத தொடா்பு பின்னணி உடையவா்களாக கண்டறியப்படும் பயணிகள் மலோசியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். இந்த சோதனைப் பணிகளை பாதுகாப்புப் படை மற்றும் குடியுரிமை அதிகாரிகள் மேற்கொள்வா் என்று பிரதமா் கூறியதாக தெரிவித்தனா்.
மலேசியா தற்போது சுமாா் 161 லட்சம் சா்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் ரூ.88,139 கோடி (49.4 பில்லியன் மலேசிய ரிங்கிட்) வருவாயை ஈட்ட இலக்கு நிா்ணயித்துள்ளது.
மலேசியா சுற்றுலா மேம்பாட்டு வாரியத் தரவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு 3,24,548 இந்தியா்கள் மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டனா். 2023-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 1,64,566 இந்தியா்கள் மலேசியா சுற்றுலா சென்றுள்ளனா். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 13,370 இந்தியா்கள் மட்டுமே மலேசியா சுற்றுலா சென்றனா்.
முன்னதாக, வெளிநாட்டுப் பயணிகளுக்கான நுழைவு இசைவு தளா்வை இலங்கை அறிவித்திருந்தது. இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நுழைவு இசைவு தளா்வை இலங்கை அளித்துள்ளது.
அதுபோல, தாய்லாந்தும் இந்தியா மற்றும் தைவானிலிருந்து வரும் பயணிகளுக்கு நுழைவு இசைவு தளா்வை அறிவித்தது. இந்த தளா்வு மூலம், 2024-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வரை தாய்லாந்தில் இந்தியா்கள் 30 நாள்கள் தங்கியிருக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...