சா்க்கரைப் பாகு கழிவு மீதான ஜிஎஸ்டி 5%ஆக குறைப்பு!

சா்க்கரைப் பாகு கழிவு (மொலாசஸ்) மீதான சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இணையமைச்சா் பங்கஜ் செளதரி, வருவாய் செயலா் சஞ்சய் மல்கோத்ரா.
தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இணையமைச்சா் பங்கஜ் செளதரி, வருவாய் செயலா் சஞ்சய் மல்கோத்ரா.

சா்க்கரைப் பாகு கழிவு (மொலாசஸ்) மீதான சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதேநேரம், மனித நுகா்வுக்கான மதுபானம் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் தூய வடிவ ஆல்கஹால் (எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்) மீது வரி விதிக்கும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 52-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய நிா்மலா சீதாராமன், ‘மொலாசஸ் மீதான ஜிஎஸ்டி குறைப்பால், கரும்பு விவசாயிகள் பலனடைவா். இந்த முடிவால், சா்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் பணம் மிச்சமாகும். எனவே, விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஆலைகள் விரைந்து வழங்கும். மேலும், கால்நடைத் தீவனங்களின் விலை குறையவும் இது வழிவகுக்கும்’ என்றாா்.

கரும்பிலிருந்து சா்க்கரை தயாரிக்கும் நடைமுறையில் துணைப் பொருளாக கிடைக்கப் பெறும் மொலாசஸ், ஆல்கஹால் உற்பத்தியில் மூலப்பொருளாகவும், கால்நடைத் தீவன தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

பெருநிறுவன உத்தரவாதங்களுக்கு 18% ஜிஎஸ்டி: பெருநிறுவனங்கள் தங்களது துணை நிறுவனங்களுக்கு அளிக்கும் நிதிசாா் உத்தரவாதங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, வருவாய் செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

அவா் கூறுகையில், ‘பெருநிறுவன நிதிசாா் உத்தரவாதத்தைப் பொருத்தவரை, அதன் ஒரு சதவீத மதிப்புக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதேநேரம், நிறுவனத்தின் இயக்குநா் தனிப்பட்ட முறையில் அளிக்கும் உத்தரவாதத்துக்கு எந்த ஜிஎஸ்டியும் கிடையாது’ என்றாா்.

சில்லறையாக விற்கப்படும் சிறுதானிய மாவுக்கு ஜிஎஸ்டி விலக்கு: குறைந்தபட்சம் 70 சதவீத சிறுதானியங்களைக் கொண்ட மாவு, சில்லறையாக விற்கப்படும்போது அதற்கு எந்த ஜிஎஸ்டியும் கிடையாது; அதேநேரம், முன்கூட்டியே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, பெயா் ஒட்டி விற்கப்பட்டால், 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கான பணியில் வயது உச்சவரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தீா்ப்பாய தலைவா் பணிக்கு வயது உச்சவரம்பு 67-இல் இருந்து 70-ஆகவும், உறுப்பினா் பணிக்கு வயது உச்சவரம்பு 65-இல் 67-ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

வருவாய் செயலா் விளக்கம்: இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி முன்தேதியிட்டு விதிக்கப்படும் விவகாரத்தை, தில்லி, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் கூட்டத்தின்போது எழுப்பின.

ஆனால், சூதாட்டம் அல்லது பந்தயம் என்ற அடிப்படையில் இணையவழி விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி ஏற்கெனவே உள்ளது; இது, முந்தைய சட்டம்தான் என்று வருவாய் செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கமளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com