அயோத்தியில் புதிய பாபர் மசூதிக்கு நபிகள் நாயகம் பெயர்!

அயோத்தியில் பாபர் மசூதிக்குப் பதிலாக கட்டப்படவுள்ள மசூதிக்கு நபிகள் நாயகம், அவரது தந்தை அப்துல்லாவின் பெயரை இணைத்து 'முஹம்மது பின் அப்துல்லா மசூதி' என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் கட்டப்படவுள்ள மசூதியும்!
இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் கட்டப்படவுள்ள மசூதியும்!

அயோத்தியில் பாபர் மசூதிக்குப் பதிலாக கட்டப்படவுள்ள மசூதிக்கு நபிகள் நாயகம், அவரது தந்தை அப்துல்லாவின் பெயரை இணைத்து 'முஹம்மது பின் அப்துல்லா மசூதி' என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1527ல் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகக் கூறி, 1992-ல் இந்து அமைப்புக்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, பின்னர் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019 நவம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

அதன்படி, பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் கொண்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அயோத்தியில் வக்ஃபு வாரியம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தனிபூர் பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட பாபர் மசூதி
இடிக்கப்பட்ட பாபர் மசூதி

இந்நிலையில் பாபர் மசூதிக்குப் பதிலாக கட்டப்படவுள்ள புதிய மசூதிக்கு நபிகள் நாயகம்(முஹம்மது நபி (ஸல்) அவர்கள்) மற்றும் அவரது தந்தை அப்துல்லாவின் பெயரை சூட்ட அகில இந்திய ரப்தா-இ-மஸ்ஜித் மற்றும் இந்திய -இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை  குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, முஹம்மது பின் அப்துல்லா மசூதி (Masjid Muhammad Bin Abdullah) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மசூதிக்கு பெயர் சூட்ட பல மாதங்களாக ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 9,000 பேர் வழிபாடு செய்யும் அளவில் நாட்டில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட உள்ள இந்த மசூதியின் கட்டுமானத்திற்கான முதல் செங்கல் வியாழக்கிழமை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமின் மூத்த மதகுருக்கள் கலந்துகொண்டனர். 

புதிதாக கட்டப்படவுள்ள மசூதியின் தோற்றம்
புதிதாக கட்டப்படவுள்ள மசூதியின் தோற்றம்

மசூதியின் ஐந்து வாயில்களுக்கு நபிகள் நாயகம் மற்றும் அவருக்குப் பின் வந்த நான்கு கலீஃபாக்களான ஹஸ்ரத் அபுபக்கர், ஹஸ்ரத் உமர், ஹஸ்ரத் உஸ்மான் மற்றும் ஹஸ்ரத் அலி ஆகியோரின் பெயரால் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மசூதி கட்டுமானத்திற்கு மக்கள் முன்வந்து நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கட்டடக் கலைஞர் இம்ரான் ஷேக், மசூதி வளாகத்தில் புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, பொறியியல், மருத்துவம், சட்டக் கல்லூரி, நூலகம், அருங்காட்சியகம், மாநாட்டு அரங்கம், தகவல் மையம் அமைக்க கூடுதலாக ஆறு ஏக்கர் நிலம் வாங்கப்படுகிறது என்றார். மருத்துவமனை, கல்லூரிகள் மூலமாக அனைத்து சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com