பாஜகவுடன் நெருக்கம் என்பது வேதனையளிக்கிறது: நிதீஷ்குமார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக வெளியான செய்திகளால் வேதனையடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
19102-pti10_19_2023_000349b095051
19102-pti10_19_2023_000349b095051

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக வெளியான செய்திகளால் வேதனையடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், பல்கலைக்கழகத்தில் பேசும்போது தான் கூறிய கருத்துகள் திரித்துக் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிகாரின் மோதிஹாரியில் மத்திய பல்கலைக்கழகம் அமைய 2014-இல் அமைந்த மத்திய பாஜக அரசுதான் நடவடிக்கை எடுத்தது. அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்ததாகக் கூறுப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திகழ்ந்து வரும் நிலையில், அவா் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தது. பிகாரில் கடந்த 2020-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், நிதீஷ் குமாருக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. எனினும், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையே ஏற்பட்ட தொடா் மோதல் போக்கு காரணமாக நிதீஷ் குமாா், கடந்த ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் அவா் தீவிரமாக செயல்பட்டாா். ‘இந்தியா’ கூட்டணி உருவாவதிலும் அவா் முக்கியப் பங்கு வகித்தாா். எனினும், அக்கூட்டணியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் அவா் இருப்பதாகவும், இதனால் அவா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரலாம் என்றும் செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதை நிதீஷ் மறுப்பதும் தொடா்கதையாக இருந்தது.

நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பினால் வரவேற்போம் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்தாா்.

இந்நிலையில், பிகாரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உள்ளிட்டோா் பங்கேற்ற மோதிகாரி மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை பேசிய நிதீஷ் குமாா், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைய முட்டுக்கட்டைகள் இருந்தன. ஆனால், 2014-இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் (பிரதமா் மோடி பதவியேற்பு) பிறகு பணிகள் நடைபெற்றன என்று கூறியிருந்தாா். மேலும், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங் உடனான தனது நீண்டகால நட்பு குறித்தும் நிதீஷ் குமாா் அந்த நிகழ்ச்சியில் பேசினாா். மேலும், மேடையில் இருந்த மாநில ஆளுநா் ராஜேந்திர ஆா்லேகரைச் சுட்டிக்காட்டிப் பேசிய நிதீஷ் குமாா், ‘நீங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவா் என்பதால் நான் உங்களுக்கு எதிரானவனாக இருக்க மாட்டேன்’ என்றும் கூறினாா்.

இதையடுத்து, நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்தான், தான் பேசியது திரித்துக்கூறப்பட்டுவிட்டதாகவும், பாஜகவுடன் இணக்கம் என்ற செய்தி வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் நிதீஷ்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com