தாலியம் விஷம் வைத்து 5 பேரைக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்

ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், திடீர் திருப்பமாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாகபுரி: தாலியம் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், திடீர் திருப்பமாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

5 பேரைக் கொலை செய்த வழக்கில், இரண்டு பெண்கள் கைதான நிலையில், ஒருவர், தனது தந்தை மரணத்துக்குப் பழிவாங்கவே, கணவர் மற்றும் மாமனார், மாமியாரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், அவருக்கு உதவிய உறவினரான ரோஸா ராம்தேக்கே, கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, அவர்களது குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக இருந்த 16 பேரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தது விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

ரோஸாவின் கணவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணையில், சங்கமித்ரா தனது கணவர் குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தினாலும் விஷம் வைத்துக் கொலை செய்ய யோசித்துவந்துள்ளார். ஆனால், அவரை ரோஸா தான் கட்டாயப்படுத்தி விஷம் வைக்க உதவிசெய்துள்ளார். இதற்குக் காரணம், ரோஸாவின் கணவர் மற்றும் அவரது சகோதரிகளுக்கு இடையே பிரிக்கப்பட்ட சொத்தில் சங்கமித்ராவின் மாமியாருக்கும் பங்கிருப்பதால், அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டால் 4 ஏக்கர் நிலமும் தங்களுக்கே வந்துவிடும் என்பதால், இந்த சதித்திட்டத்தைத் தீட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததை விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஐந்து பேரையும் விஷத்தின் விஷம் என்று அறியப்படும் தாலியம் உலோகத்தைப் பயன்படுத்தி இரண்டு பெண்கள் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விஷத்தின் விஷம் என்று நிறமில்லாத, வாசனையற்ற, சுவையற்ற உலோகமான தாலியத்தை - தொட்டாலே நச்சுத்தன்மையுடையது - கொலைகாரர்கள் கொலைக்கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஷங்கர், அவரது மனைவி விஜயா, அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் பலியானவர்கள். இவர்களது மூத்த மகன், கார் ஓட்டுநர், மற்றொரு உறவினரும் தாலியம் விஷத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும், அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் என மூன்று வாரங்களுக்குள் அனைவரும் மரணமடைந்தனர். 

இதையும் படிக்க.. பேரிடர் ஒத்திகை: சிறப்பு ஒலியுடன் செல்லிடபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்

இவர்களது மஹாகோ கிராமத்தில் இது தொடர்பான அச்சம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் மற்றொருபக்கம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், ஷங்கரின் மருமகள் சங்கமித்ரா மற்றும் அவரது உறவினர் ரோஸாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேளாண் விஞ்ஞானியான சங்கமித்ரா (22), தெலங்கானாவிலிருந்து தாலியம் வாங்கி வந்து, தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது குடும்ப பிரச்னை காரணமாக, தந்தை உயிரிழந்ததால், அதற்கு பழிவாங்கும் வகையில், தாலியத்தை நாள்தோறும் உணவில் சேர்த்து, கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரை, உறவினர் ரோஸாவுடன் சேர்ந்து கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் வலி நிறைந்த மரணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் குடும்பத்தால் தனக்கு நேரிடும் கொடுமைகள் குறித்து அறிந்து, 5 மாதங்களுக்கு முன்பு, தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இவர்களைக் கொலை செய்ய ஆன்லைனில் தேடியபோது அவருக்கு இந்த திட்டம் கிடைத்துள்ளது. 

குற்றவாளியின் செல்லிடப்பேசியை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் ஊமத்தங்காய் உள்ளிட்ட விஷங்கள் குறித்து தேடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஊமத்தங்காயை கலந்தால் உணவின் நிறம் மாறிவிடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் அவர் காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com