கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி! தொடரும் சோகம்..

கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் டி நாயர்
ராகுல் டி நாயர்

கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ராகுல் டி நாயர். இவர், கொச்சியில் நண்பர்களுடன் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி காக்கநாடு பகுதியில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஆன்லைன் மூலம் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட பிறகு ராகுலுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி திடீரென்று நிலைகுலைந்து கீழே விழுந்த ராகுலை மீட்டு தனியார் மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், ஷவர்மா சாப்பிட்ட அடுத்த நாளான அக்.19 முதல் காய்ச்சலும், வயிற்றுப் போக்கும் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, தொற்று காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த ராகுலுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மாலை உயிரிழந்தார்.

இதையும் படிக்க | ஷவர்மாவில் என்ன ஆபத்து?

இதுகுறித்து தனியார் மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “ராகுலுக்கு பல்துறை மருத்துவக் குழு மூலம் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்தாரா என்பது ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகளும், பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அதே உணவகத்தில் அக். 18-ஆம் தேதி உணவு சாப்பிட்ட மேலும் 3 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷவர்மா விற்பனை செய்த உணவகத்துக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அக்டோபர் 23-ஆம் தேதி சீல் வைத்துள்ளனர்.

கேரளத்தில் கடந்தாண்டும், நாமக்கல்லில் கடந்த மாதமும் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழந்தை தொடர்ந்து, தற்போதைய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷவர்மாவுக்கு பலியாகும் சம்பவம் அதிகரித்து கொண்டே போவதால், அரசுத் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com