தூதரக உறவில் விரிசல்: கனடாவிலிருந்து பருப்பு இறக்குமதி சரிவு

கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதியானது தூதரக ரீதியிலான உறவு முறிவுக்குப் பிறகு ஒரு சரிவை சந்தித்துள்ளது.
தூதரக உறவில் விரிசல்: கனடாவிலிருந்து பருப்பு இறக்குமதி சரிவு
தூதரக உறவில் விரிசல்: கனடாவிலிருந்து பருப்பு இறக்குமதி சரிவு


கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதியானது தூதரக ரீதியிலான உறவு முறிவுக்குப் பிறகு ஒரு சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் அளவு தொடர்ந்து சரிந்து வந்துள்ளது.

அதேவேளையில், ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலைக்கு பின்னால் இந்தியா இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் குற்றம்சாட்டிப் பேசினாா். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. எனினும், கனடாவில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்தியாவும் அதேபோன்ற பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து, கனடா-இந்தியா இடையிலான ராஜீய உறவுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவில் இருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை விசா வழங்குவதையும் நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 41 போ் அண்மையில் வெளியேற்றப்பட்டனா்.

இந்நிலையில், கனடாவைச் சோ்ந்தவா்களுக்கு சில குறிப்பிட்ட பிரிவுகளில் விசா வழங்குவதை சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு இந்தியா அக். 26ஆம் தேதி மீண்டும் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு என்பது தற்போது பருப்பு இறக்குமதியில் எதிரொலித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியா 6.10 லட்சம் டன் பருப்புகளை இறக்குமதி செய்திருக்கிறது. இதில் பாதிக்கும் மேல் ஆஸ்திரேலியாவிடமிருந்து வந்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை படிப்படியாக உயர்ந்து ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் பருப்புகளின் அளவு 3.11 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பருப்பு 2.8 லட்சம் டன்னாகக் குறைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு அதிகளவில் பருப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் கனடா முக்கிய பங்கு வகித்து வந்தது.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் விரிசல் காரணமாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை துறைமுகத்துக்கு கனடாவிலிருந்து வரும் ஒரு குவிண்டால் பருப்பின் விலை ரூ.6,400 என்ற நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் ஒரு குவிண்டால் பருப்பு ரூ.6.450 ஆக உள்ளது. 

ஏற்கனவே, இந்தியாவில், கடந்த ஆண்டு முதல் பருப்புத் தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், இந்த இறக்குமதி சிக்கல் மற்றும் விலை உயர்வு போன்றவை சந்தையை வெகுவாக பாதிக்கலாம் என்றும், ஆஸ்திரேலியாவில் பருவமழை மாற்றம் காரணமாக பருப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டால் அது மறைமுகமாக இந்தியாவின் பருப்பு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com