ஒடிசாவில் இடி, மின்னலுக்கு 12 போ் பலி, 14 பேர் காயம்

ஒடிசாவில் சனிக்கிழமை பெய்த கனமழையின்போது இடி,மின்னல் தாக்கி 6 மாவட்டங்களைச் சோ்ந்த 12 போ் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கட்டாக் (ஒடிசா): ஒடிசாவில் சனிக்கிழமை பெய்த கனமழையின்போது இடி,மின்னல் தாக்கி 6 மாவட்டங்களைச் சோ்ந்த 12 போ் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாநிலம் முழுவதிலும் இருந்து எட்டு கால்நடைகள் பலியாகியுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதிக் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேசுவரம், கட்டாக்  உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் சனிக்கிழமை  சுமாா் 1.5 மணிநேர இடைவெளியில் முறையே 126 மி.மீ. மற்றும் 95.8 மி.மீ. மழை பதிவாகியது.

சனிக்கிழமை பெய்த கனமழையின்போது பதிவாகிய 36,957 மின்னல்களில் 25,753 தரையைத் தாக்கின. அவ்வாறு மின்னல் தாக்கி குா்தா மாவட்டத்தில் 4 போ், போலான்கிா் மாவட்டத்தில் 2 போ், அங்குல், பௌத், தேன்கானால், கஜபதி, ஜகத்சிங்பூா், பூரி மாவட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 12 போ் பலியாகியுள்ளனர். மேலும், 11 மாவட்டங்களைச் சோ்ந்த 14 போ் காயமடைந்துள்ளனா். 8 கால்நடைகள் பலியாகி உள்ளன. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் ரூ.4 லட்சம் நிவாரணம்  நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

நபரங்பூர், கலஹண்டி, நுவாபாடா, ராயகடா, கஞ்சம், கஜபதி, கந்தமால், நாயகர், பலங்கிர், சோனேபூர், பௌத் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பர்கர், சம்பல்பூர், தியோகர், அங்குல், தேன்கானால், ஜாஜ்பூர், கியோஞ்சார், குர்தா மற்றும் கட்டாக் (கட்டாக் நகரம் உட்பட), மல்கங்கிரி, கோராபுட், ஜார்சுகுடா, சுந்தர்கர், பூரி மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடி, மின்னலுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒடிசாவின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் 7 ஆம் தேதி வரை மாநிலத்தின் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், மக்கள் வீட்டுக்குள்ளேயே எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com