நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஆரம்பம்: 5 நாட்கள் நடைபெறுகிறது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை திங்கள்கிழமை (செப். 18) தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஆரம்பம்: 5 நாட்கள் நடைபெறுகிறது


புதுதில்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை திங்கள்கிழமை (செப். 18) தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 முதல் 22 ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

ஆனால் இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இதையடுத்து, நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அரசியல் நிர்ணயசபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, வழக்குரைஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் பழைய கட்டத்தில் தொடங்குகிறது, மற்ற நான்கு நாள்கள் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தில் பாஜக உறுப்பினர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார். 

கடந்த மே மாதம் 28-ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ்கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com