

புது தில்லி: காவிரியில் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க காவிரி ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் பரிந்துரையின்படி, காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்காத நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை தில்லிக்கு அனுப்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி, இந்தக் குழு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு (சி.டபிள்யு.எம்.ஏ) பொறுப்பு வகிக்கும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தது.
தமிழகத்துக்கு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு அளித்தனர்.
மேலும், சம்பா பயிரிட்ட தமிழக விவசாயிகளின் நிலைமை, குடிநீர்த் தேவை, கர்நாடகம் கட்ட இருக்கும் மேக்கே தாட்டு அணை போன்ற பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தாரிடம் தண்ணீர் இருப்பு, நீர்வரத்து போன்ற தரவுகள் கண்காணிக்கப்படுவதை மத்திய அமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர், எம்.பி.க்கள் குழுவிடம் பேசிய மத்திய அமைச்சர், "ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள அளவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையத்திடம் வலியுறுத்தப்படும். இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படக் கூடாது. மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை' என்றார்.
துரைமுருகன் பேட்டி: பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், 3,500 கன அடிதான் வந்து கொண்டிருக்கிறது.
வறட்சிக் காலத்தில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியான விகிதாசார அடிப்படையில்கூட கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுக்கிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வலுவான அறிவுறுத்தல்களை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றார் அவர்.
தமிழக குழுவில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக), ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை, என்.சந்திரசேகரன்(அதிமுக), வைகோ (மதிமுக), பி.ஆர்.நடராசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), அன்புமணி ராமதாஸ் (பாமக), தொல். திருமாவளவன் (விசிக), கே.நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஜி.கே.வாசன் (தமாகா), ஏ.கே.பி. சின்னராஜ் (கொங்கு மக்கள் தேசிய கட்சி), தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசின் நீர்வள துறைச் செயலர் சந்தீப் சக்úஸனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.