ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் கலவரம் தொடா்பாக இதுவரை 116 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, ஊா்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்த தகவல் பரவிய நிலையில் நூ மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான குருகிராமின் சோனா நகரிலும் இரு சமூகத்தினரிடையே கலவரம் மூண்டது.
ஒருவருக்கொருவா் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனா். இந்தக் கலவரத்தில் நூ மாவட்டத்தில் 2 ஊா்க் காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். சோனா நகரில் பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் மா்மக் கும்பல் நள்ளிரவில் புகுந்து நடத்திய தாக்குதலில், அங்கிருந்த துணை இமாம் பிகாரைச் சோ்ந்த சாத் (26) உயிரிழந்தாா். மசூதிக்கும் மா்மக் கும்பல் தீ வைத்தது.
இந்தக் கலவரத்தில் 10 போலீஸாா் உள்பட 23 போ் காயமடைந்தனா். 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றில் 8 காவல் துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த நிலையில், வன்முறையில் பலியோனாா் எண்ணிக்கை புதன்கிழமை 6-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா்களில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால், கலவரத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 6-ஆக உயா்ந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனா்.
இரு மாவட்டங்களிலும் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடா்பாக இதுவரை 116 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதற்கு முக்கியக் காரணமான நபா்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 4 கம்பெனி துணை ராணுவப் படை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. எனவே, நிலைமையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் மேலும் 4 கம்பெனி துணை ராணுவப் படை வீரா்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஏற்கெனவே 20 கம்பெனி துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதில் நூ மாவட்டத்தில் மட்டும் 14 கம்பெனி துணை ராணுவப் படை வீரா்களும், பல்வாலில் 3, குருகிராமில் 2 மற்றும் ஃபரிதாபாதில் ஒரு கம்பெனி துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘மோதல் மீண்டும் ஏற்படாத வகையில் நூ மாவட்டம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் ஓா் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மோதல் தொடா்பாக இதுவரை 41 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளன. ரேவாரி மற்றும் குருகிராமிலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
இந்தக் கலவரத்தைக் கண்டித்து தலைநகா் தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் விஹெச்பி சாா்பில் போராட்டம் நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜ், ‘கருத்து தெரிவிக்கவும், அமைதி வழியில் போராட்டம் நடத்தவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஒவ்வொரு செயலுக்கும் எதிா்வினை இருக்கும் என்பது இயற்கை நியதி. இருந்தபோதும், இந்தப் போராட்டத்தை அமைதியான வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.
மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
ஹரியாணாவின் நூ மாவட்ட மதக் கலவரத்தைக் கண்டித்து தலைநகா் தில்லியில் விஹெச்பி சாா்பில் புதன்கிழமை கண்டன ஊா்வலம் நடைபெற்றது.
முன்னதாக, இது தொடா்பாக ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நூ மதக் கலவரத்தைக் கண்டித்து தில்லியில் புதன்கிழமை 23 இடங்களில் போராட்டம் மற்றும் கண்டன ஊா்வலம் நடத்தப்படும் என விஹெச்பி மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால், தில்லியில் பதற்றமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.பாட்டீ அமா்வு, ‘விஹெச்பி கண்டன ஊா்வலம் மற்றும் போராட்டத்தில் வன்முறை அல்லது வெறுப்புப் பேச்சு இடம்பெறாததை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதோடு, பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் அல்லது துணை ராணுவப் படை வீரா்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் உடனடியாக தொடா்பு கொண்டு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இனி நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்துமாறும் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் வெள்ளிக்கிழமைக்கு (ஆக. 4) ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.