பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? 3 கேள்விகளை முன்வைத்த காங்கிரஸ்

மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? 3 கேள்விகளை முன்வைத்த காங்கிரஸ்
Published on
Updated on
2 min read

மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், விவாதத்தைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் சார்பில் பேசி வருகிறார்.

அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? மணிப்பூர் சென்று பார்த்ததால்தான், அங்கிருக்கும் களநிலவரம் எங்களுக்குத் தெரியும். முதலில் மணிப்பூர் செல்லுங்கள். அங்குள்ள களநிலவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு பேசுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், இதுவரை அந்த மாநில முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படாதது ஏன்? மணிப்பூர் முதல்வர் பதவியை காப்பாற்ற மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு முயற்சிக்கிறது? 

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. பிரதமரின் மௌன விரதத்தைக் கலைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் 80 நாள்களுக்குப் பிறகே பேசினார். அதுவும் வெறும் 30 வினாடிகள்தான் என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத் தொடக்கத்திலேயே மக்களவையில் அமளி எழுந்தது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீது மக்களவையில் இன்று பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில், கௌரவ் கோகோய் (அசாம்) விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசி வருகிறார்.

இரண்டாவது நாளாக, மக்களவைக் கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். விவாதத்துக்கு முன்னதாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், குறுகிய கால விவாதத்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சா் பதிலளிப்பாா் என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இருதரப்பும் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால், நாடாளுமன்ற அலுவல்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று விவாதம்
நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன.

அந்தத் தீா்மானத்தின் மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமா் மோடி பதிலளித்துப் பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விவாதத்துக்கு மொத்தம் 12 மணி நேரத்தை அலுவல் ஆலோசனைக் குழு ஒதுக்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.