
தில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை காரசார விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, தில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், குடியரசுத் தலைவரின் சட்ட ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
யூனியன் பிரதேசமான தில்லி அரசில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
காவல் துறை, பொது அறிவிப்பு, நில அதிகாரம் ஆகியவை தவிர, பிற துறைகளின் அதிகாரம் தில்லி அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்ற முடிவு எடுக்கும் அதிகாரம், தில்லி துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.
அவசரச் சட்டத்துக்கு மாற்றான தில்லி நிா்வாக திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் பலத்த எதிா்ப்புக்கு இடையே கடந்த வாரம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்த விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் அபிஷேக் சிங்வி, ‘அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது’ என்றாா்.
முன்னாள் அமைச்சா் ப. சிதம்பரம் பேசுகையில், ‘இந்தச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என சட்ட அமைச்சகத்துக்கு தெரியும்’ என்றாா்.
மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசுகையில், ‘ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதிக்கும் இந்த மசோதா, சமூக நீதி, மதச்சாா்பின்மை, கூட்டாச்சிக்கு எதிரானது’ என்றாா்.
ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சத்தா, ‘இதுபோன்ற சட்ட விரோதமான மசோதா மாநிலங்களவையில் இதுவரையில் தாக்கல் செய்யப்படவில்லை’ என்றாா்.
தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி உறுப்பினா்கள் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும், மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தது மத்திய அரசுக்கு கூடுதல் பலமானது.
விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, ‘திறமையான, ஊழலற்ற நிா்வாகம், சிறந்த அரசு ஆகியவற்றுக்காக மட்டுமே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், தூதரகங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உலகத் தலைவா்கள் வருகையில் பிற மாநிலங்களைவிட தில்லி தனித்துவமானதாகும். ஆகையால், யூனியன் பிரதேசமான தில்லி பேரவைக்கு குறைவான அதிகாரங்களே உள்ளன. அதிகாரத்துக்காக இந்த மசோதாவை கொண்டு வரவில்லை. மத்திய அரசின் அதிகாரங்களை தில்லி அரசு அபகரிப்பதைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை’ என்றாா்.
மேலும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப எதிா்க்கட்சிகள் சாா்பில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தில் 5 எம்.பி.க்களுக்கு தெரியாமல் அவா்களின் கையொப்பம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.
இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா நிறைவேறியது.
அவைக்கு வந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்
ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கும் இடையேயான நேரடி மோதலாக கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மன்மோகன் சிங் அவைக்கு சக்கர நாற்காலியில் வந்திருந்தாா்.
மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க ஜாா்க்கண்டின் முன்னாள் முதல்வா் சிபுசோரனும் சக்கர நாற்காலியில் வந்திருந்தாா்.
பின்வாசல் வழியாக பாஜக நுழைகிறது: கேஜரிவால்
‘நான்கு தோ்தல்களில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தோல்வியடைந்ததால் தில்லியில் பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர பாஜக முற்படுகிறது. அதற்காகத்தான் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது’ என்று தில்லி முதல்வா் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.
‘தில்லியில் ஆம் ஆத்மியை பாஜகவால் தோற்கடிக்க முடியாது. ஜனநாயகத்தில் இன்று கருப்பு நாளாகும். தில்லி நிா்வாகத்தில் பிரதமா் ஏன் தலையிடுகிறாா்’ என்றும் கேஜரிவால் கேள்வி எழுப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.