பிகார் கொத்தனார்களால்தான் இப்படி.. ஹிமாசல முதல்வர் சொன்னது என்ன?

பிகாரிலிருந்து வந்த கொத்தனார்களால்தான் இப்படி ஆனதாக மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு குற்றம்சாட்டியதாகத் தகவல்கள் வெளியாகின.
பிகார் கொத்தனார்களால்தான் இப்படி.. ஹிமாசல முதல்வர் சொன்னது என்ன?

கடந்த 50 ஆண்டுகளில் காணாத அளவுக்கு ஹிமாசலப் பிரதேசம் இயற்கைப் பேரழிவை சந்தித்துள்ள நிலையில், பிகாரிலிருந்து வந்த கொத்தனார்களால்தான் இப்படி ஆனதாக மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு குற்றம்சாட்டியதாகத் தகவல்கள் வெளியாகின.

மலைப் பிரதேசமான ஹிமாசலில் கட்டப்பட்ட ஒழுங்கற்ற கட்டடங்களால்தான் இந்த அவல நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வெளி மாநிலங்களிலிருந்து வந்த கொத்தனார்கள், ஹிமாசலில், கட்டடத்துக்கு மேல் கட்டடங்களை கட்டினார்கள். இங்குள்ள புவி அமைப்புக்கு ஏற்ப கட்டடங்களை கட்டவில்லை. வெளிமாநில கொத்தனார்கள், அவர்களை நான் பிகாரி ஆர்கிடெக்ட்ஸ் என்று சொல்லுவேன், இங்கே வந்து, மாடி மாடியாகக் கட்டினார்கள். இந்த மாநிலத்தில் உள்ளூர் கொத்தனார்கள் அதிகம் இல்லை என்று கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தான் அவ்வாறு கூறவில்லை என்று ஏஎன்ஐயில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஹிமாசலில் ஏராளமான பிகார் மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களையும் பத்திரமாக வெளியேற்ற பணிகள் நடந்து வருகிறது. இங்கே இயற்கைப் பேரிடர்களில் சுமார் 200 பிகார் மக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எங்களது சகோதரர்கள் போன்றவர்கள். இங்குள்ள கட்டட பொறியாளர்கள் மீதுதான் தவறு உள்ளது. பிகாரிலிருந்து வந்தவர்கள் அனைவரும் சாதாரண கூலித் தொழிலாளிகள். அவர்கள் என்ன செய்வார்கள் என்று சுக்விந்தர் சிங் சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஹிமாசலில் நிலச்சரிவு மற்றும் இதர அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 71 ஆக உயா்ந்தது.

மாநிலம் முழுவதும் சுமாா் 800 சாலைகளில் தொடா்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிம்லாவின் சம்மா் ஹில், கிருஷ்ணா நகா், ஃபாக்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

சம்மா் ஹில் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நிலச்சரிவால் ஒரு சிவன் கோயில் மண்ணில் புதைந்தது. இதில் பல பக்தா்கள் சிக்கினா். இடிபாடுகளில் இருந்து 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஹமாசல பிரதேச மழை-வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை முதல்வா் முகேஷ் அக்னிஹோத்ரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com