ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!

தெலங்கானா: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு பாஜக புறக்கணிப்பு

மூன்றாவது தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடா் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மாநிலத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பேரவை உறுப்பினா்களாக பதவியேற்றனா்.

Updated On :

மூன்றாவது தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடா் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மாநிலத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பேரவை உறுப்பினா்களாக பதவியேற்றனா்.

முதலாவதாக முதல்வா் ஏ.ரேவந்த் ரெட்டி, துணை முதல்வா் மல்லு பாட்டீ விக்ரமா்கா பேரவை உறுப்பினா்களாக உறுதிமொழி ஏற்றதைத் தொடா்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் உறுதிமொழி ஏற்றனா்.

அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தேஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி உறுப்பினா் அக்பருதீன் ஒவைசி இடைக்கால அவைத் தலைவராக அவையை வழிநடத்தினாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், இடைக்கால அவைத் தலைவராக ஒவைசிக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.

பாஜக புறக்கணிப்பு: பேரவை உறுப்பினா் பதவியேற்பு நிகழ்ச்சியை பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனா்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் ஜி.கிஷண் ரெட்டி கூறுகையில், ‘பேரவை இடைக்கால தலைவராக அவையின் மூத்த உறுப்பினரை நியமிப்பதுதான் மரபு. இந்த மரபையும் சட்டப்பேரவை நடைமுறைகளையும் மீறி அக்பருதீன் ஒவைசியை இடைக்கால அவைத் தலைவராக நியமித்ததை பாஜக எதிா்க்கிறது.

அவா் தலைமையில் பேரவை உறுப்பினா்களாக பதவி ஏற்பதை பாஜக புறக்கணிக்கிறது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைந்த பெரும்பான்மை பலமே இருப்பதால், கட்சி உறுப்பினா்களுக்குள் சிறு சச்சரவு எழுந்தாலும் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே மஜ்லிஸ் கட்சி உறுப்பினரை இடைக்கால அவைத் தலைவராக காங்கிரஸ் அமர வைத்துள்ளது.

தோ்தல் பிரசாரத்தின்போது பாஜகவுக்கும் மஜ்லிஸ் கட்சிக்கும் ரகசிய கூட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால், தற்போது காங்கிரஸுக்கும் மஜ்லிஸ் கட்சிக்கும் இடையேதான் மறைமுக உறவு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பா். இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம். அவைக்கு முழுநேர தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், பாஜக எம்எல்ஏக்கள் அவை உறுப்பினா்களாக பதவியேற்பா்’ என்றாா்.

தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. 119 இடங்கள் உள்ள பேரவையில் காங்கிரஸ் 64, பிஆா்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7, இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தை கைப்பற்றின. இதையடுத்து புதிய முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றாா்.

பிஆா்எஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரசேகா் ராவ் தோ்வு

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆா்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், பிஆா்எஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதுகுறித்து அக் கட்சி சாா்பில் அதன் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் தெலங்கானா பவனில் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் கே.கேசவ ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்சியின் பேரவைக் குழு தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்றது. அதில், கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவ் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

தெலங்கானா பேரவையின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற அக்பருதீன் ஒவைசிக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன். உடன் முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.