காங்கிரஸுக்கு நன்கொடை அளித்த காயத்ரி ரகுராம்!

நடிகை காயத்ரி ரகுராம், காங்கிரஸ் கட்சிக்கு 1380 ரூபாயை நன்கொடை அளித்துள்ளார்.
படம்: முகநூல்/காயத்ரி ரகுராம்
படம்: முகநூல்/காயத்ரி ரகுராம்


சென்னை: பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்த நடிகை காயத்ரி ரகுராம், காங்கிரஸ் கட்சிக்கு 1380 ரூபாயை நன்கொடை அளித்துள்ளார்.

அது மட்டுமல்ல, பாஜகவை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இந்தத் தகவலை அவரே தனது எக்ஸ் பக்கத்தில், நன்கொடை அளித்ததற்கான சான்றுடன் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.

அதில், எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க.வை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. 

சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்- காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளியுங்கள் என்று கூறி அதற்கான இணைப்பையும் தனது எக்ஸ் பக்கத்தில் வழிங்கியுள்ளார்.

அதற்குக் கீழே, தான் காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு நிறைவையொட்டி, 1380 ரூபாயை நன்கொடை அளித்திருப்பதற்கான சான்றையும் இணைத்துள்ளார்.

முன்னதாக, பாஜகவிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல், பொதுவான விஷயங்களுக்காக குரல்கொடுத்து வந்தார். இடையிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், அவ்வப்போது பாஜகவுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, அவர் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளை விமரிசிக்காமலும் இருந்தார். இதனால், அவர் அதிமுகவில் இணைகிறார், விசிகவில் இணைகிறார் என்றெல்லாம் நாள்தோறும் ஒவ்வொரு கட்சிப் பெயருடன் அவர் பெயரை இணைத்து ஊடகங்களில் ஊகங்கள் வெளியாகிக்கொண்டேயிருந்தன. ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாக எந்தக் கட்சியிலும் இணையவில்லை.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு அவர் நன்கொடை அளித்திருப்பதாக அவரே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு நீக்கம் செய்து தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவர் கடந்த ஜனவரி மாதம் கட்சியிலிருந்து விலகினார்.

கட்சியிலிருந்து வெளியேறுவது தொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுவது என்று நான் முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை. அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது.

பெண்களே, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, விடியோக்களை போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கவுள்ளேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com