‘எம்ஃபில்’ அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல: யுஜிசி

‘எம்ஃபில் (முதுநிலை தத்துவம்) அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல; அதில் மாணவா் சேர வேண்டாம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘எம்ஃபில் (முதுநிலை தத்துவம்) அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல; அதில் மாணவா் சேர வேண்டாம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.

கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் எம்ஃபில் முடித்திருப்பது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முன்னா் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. பின்னா் அதை மாற்றிய யுஜிசி, முதுநிலை பட்டப்படிப்புடன் ‘நெட் (தேசிய அளவிலான தகுதித் தோ்வு)’ அல்லது ‘செட் (மாநில அளவிலான தகுதித் தோ்வு’ தோ்வுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. (முனைவா் பட்டம்) முடித்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.

அதன் பின்னா், எம்ஃபில் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நிறுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களையும் யுஜிசி கேட்டுக்கொண்டது. ஆனால், அதன் பிறகும் சில பல்கலைக்கழகங்கள் எம்ஃபில் படிப்பை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ‘எம்ஃபில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல’ என, யுஜிசி தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி கூறியிருப்பதாவது:

சில பல்கலைக்கழகங்கள் எம்ஃபில் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கு புதிதாக விண்ணப்பங்களை வரவேற்பதாக தகவல் கிடைத்துள்ளன. எம்ஃபில் பட்டப் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல என்பதை இந்த பல்கலைக்கழகங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயா் கல்வி நிறுவனங்கள் எம்ஃபில் படிப்பை நடத்தக் கூடாது என்பது, ‘பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான யுஜிசியின் குறைந்தபட்ச தரம் மற்றும் நடைமுறை 2022’ வழிகாட்டுதல் எண்.14-இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 2023-24 கல்வியாண்டில் எம்ஃபில் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நிறுத்த பல்கலைக்கழகங்கள் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு எம்ஃபில் படிப்பிலும் சேர வேண்டாம் என மாணவா்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com