தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

முன்னதாக, அவரிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது. 2021-22-ஆம் ஆண்டு தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி அரசின் கலால் துறை இலாகாவுக்கு பொறுப்பு வகித்த மனீஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும், கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா, கலால் துணை ஆணையர் ஆனந்த் குமார் திவாரி, உதவி கலால் ஆணையர் பங்கஜ் பட்நாகர், ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவரும் ஓஎம்எல் கேளிக்கை நிகழ்வு மேலாண்மை நிறுவன அதிகாரியுமான விஜய் நாயர்  மற்றும் தொழிலதிபர்கள், 2 நிறுவனங்கள் மீதும் கடந்த ஆகஸ்ட் 17 -ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

கடந்த ஆண்டு அக். 17- ஆம் தேதியும் சிபிஐ விசாரணைக்கு சிசோடியா ஆஜரானார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. ஆனால், அதில் சிசோடியா பெயர் இடம்பெறவில்லை. தொடர் விசாரணைக்கு பின்னர் இரண்டாவது முறையாக சிபிஐ கடந்த 19-ஆம் தேதி அவரை விசாரணைக்கு அழைத்திருந்தது.

ஆனால், அரசின் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்வதற்கு சிசோடியா கால அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி, பிப். 26-ஆம் தேதி ஆஜராக சிபிஐ அனுமதியளித்திருந்தது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 11. 15 மணிக்கு தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

தொடர் விசாரணை: தில்லி அரசின் கலால் கொள்கையின் பல்வேறு அம்சங்கள், மதுபான வியாபாரிகளுடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள், இந்த வழக்கில் பிறழ் சாட்சியான தினேஷ் அரோரா மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுடனான தொடர்புகள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள குற்றச்சாட்டுகள், பல்வேறு கைப்பேசி தகவல் பரிமாற்றங்கள் பற்றிய விவரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் துணை முதல்வர் சிசோடியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சிசோடியாவின் பதில்களில் திருப்தி இல்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், முக்கிய விவகாரங்களில் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கங்களைத் தவிர்த்தது, அவரைக் கைது செய்ய வழிவகுத்தது என்றும் சிபிஐ வட்டாரங்களில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அவர் திங்கள்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் எனவும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, சிபிஐ தலைமையகத்தை அடைவதற்கு முன் சிசோடியா தனது ஆதரவாளர்களுடன் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி சமாதிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு சிசோடியா பேசுகையில், தான் கைது செய்யப்படுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

சிபிஐ முன் சிசோடியா ஆஜராவதை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் சிபிஐ தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் நான்கடுக்கு தடுப்புகளைக் காவல் துறையினர் வைத்திருந்தனர். மேலும், தெற்கு தில்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பின்னடைவு:  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மனீஷ் சிசோடியா, கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். 

அமைச்சரவையில் துணை முதல்வராகவும் நிதி, திட்டம், கலால், கல்வி, பொதுப் பணித் துறை, சுற்றுலா என 12 துறைகளுக்கும் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கேஜரிவால் அமைச்சரவையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சர் சிசோடியா ஆவார். முன்னதாக,  அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.

கேஜரிவால் அரசின் 2023-24 பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட  இருந்த நிலையில், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் சிசோடியா கைது 
செய்யப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com