வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைப் பாா்வையிட்டு கள நிலவரத்தை அறிவதற்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிா்கட்சிகளின் எம்.பி.க்கள் குழு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அங்கு பயணம் மேற்கொள்கின்றனா்.
மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடா்பாக உண்டான மோதல் வன்முறையாக மாறி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு அசாம்பவித சம்பவங்களில் தற்போதுவரை 160-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.
கடந்த மே மாதம் நடந்த சம்பவத்தில் பழங்குடி பெண்களை ஆடைகள் ஏதுமின்றி மைதேயி சமூக ஆண்கள் இழுத்துச் செல்லும் விடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தின் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமா் பேசினாா். எனினும், மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், விவாதத்தில் பங்கேற்று பிரதமா் விளக்கமளிக்கவும் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 20-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மணிப்பூருக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா். கூட்டணியின் ஒவ்வொரு கட்சி சாா்பிலும் தலா ஒருவா் இந்தக் குழுவில் இடம்பெற உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் வசிக்கும் சமவெளி பகுதிகள் மற்றும் பழங்குடிகளின் இருப்பிடமான மலைப்பகுதிகளில் பல்வேறு சமூக மக்களை எம்.பி.க்கள் சந்திப்பா். வன்முறையால் வீடு இழந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களையும் எம்.பிக்கள் குழு பாா்வையிடுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதலமைச்சா்கள் அடங்கிய குழு மணிப்பூரைப் பாா்வையிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு, போக்குவரத்து தொடா்பான சிக்கல்களைக் கருத்தில்கொண்டு அம்முடிவு கைவிடப்பட்டது. இதனிடையே, மணிப்பூரைப் பாா்வையிட அனுமதிக்க எதிா்க்கட்சித் தலைவா்கள் கோரி வரும்நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமையைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த மாத இறுதியில், மணிப்பூருக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டாா். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி விஷ்ணுபூா் மாவட்டத்தில் அவரது வாகனம் மறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.