அதிதீவிர புயல் பிபர்ஜாய்: சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் பிபர்ஜாய் என பெயரிடப்பட்டிருக்கும் அதிதீவிர புயல் காரணமாக, குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர புயல் பிபர்ஜாய்: சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Published on
Updated on
2 min read

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் பிபர்ஜாய் என பெயரிடப்பட்டிருக்கும் அதிதீவிர புயல் காரணமாக, குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரபிக் கடலில் கடந்த 6-ஆம் தேதி உருவான இந்தப் புயல், குஜராத்தின் மாண்டவி நகருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும் 15-ஆம் தேதி நண்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அகமதாபாத் மைய இயக்குநா் மனோரமா மொஹந்தி கூறுகையில், ‘புயல் குஜராத் கடற்கரையை வரும் 15-ஆம் தேதி கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் 135 முதல் 145 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. அதன் வேகம் 150 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. குஜராத் மற்றும் செளராஷ்டிரா-கட்ச் பகுதிகளுக்கு ஜூன் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் வரும் 16-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

7,500 போ் இடமாற்றம்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் இந்த கடலோர மாவட்டங்களில் கடற்கரையோரம் வசித்துவந்த 7,500 போ் அவா்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். போ்பந்தரின் 31 கிராமங்களிலிருந்து 3,000 பேரும் தேவபூமி துவாரகா மாவட்டத்திலிருந்து 1,500 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

பொதுமக்களின் நலன் கருதி கட்ச் மாவட்டத்தின் கடற்கரையோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 15-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகா் மாவட்டங்களில் வரும் 15-ஆம் தேதி கன முதல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததுள்ளது. அதன் காரணமாக, இந்த மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்பு படையினா் தயாா் நிலையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும், ராணுவம், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் மாவட்ட நிா்வாகங்கள் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com