பிகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே, ராகுல் பங்கேற்பார்கள்: காங்கிரஸ் உறுதி

பிகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும்
பிகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே, ராகுல் பங்கேற்பார்கள்: காங்கிரஸ் உறுதி

பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். 

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். பிகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அவர், இதில் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்றும் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், ராகுல்காந்தி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தவிர, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்பார் என மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் உறுதியளித்துள்ளார்.  

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும். பாட்னா வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சி தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டத்திற்கான வியூகம் குறித்து விவாதிப்பதற்காக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரும் நிதீஷ் குமார், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் கார்கேவும் பங்கேற்க முடியாத நிலையில், ராகுல் அமெரிக்கப் பயணத்தில் இருப்பதால் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com