குடியரசுத் தலைவர் பெயர் இல்லை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிா்க்கட்சிகள்

குடியரசுத் தலைவர் பெயர் இல்லை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிா்க்கட்சிகள்

வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய எதிா்க்கட்சிகள்

வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இப்பட்டியலில் மேலும் சில எதிா்க்கட்சிகள் இணையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 1927-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு சுமாா் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இரு அவைகளிலும் உறுப்பினா்களின் பணித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி, பிரதமா் மோடி அடிக்கல் நாட்டிய புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் உரிய நேரத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தற்சாா்பு இந்தியா உணா்வை வெளிப்படுத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி வரும் மே 28-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, ஹிந்து தேசியவாதி வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிா்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமா்சித்தன.

மத்திய அரசு இவ்வாறு செயல்படுவது தேசத் தலைவா்களுக்கு செய்யும் அவமதிப்பு என்று காங்கிரஸ் கடுமையாக சாடியது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்க போவதாக திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முறையாகப் பெற்றதும், புறக்கணிப்பு அறிவிப்பை அதிகாரபூா்வமாக வெளியிடுவோம் என எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளனா்.

நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாகுறித்து அதிருப்தி தெரிவித்து மாநிலங்களவைத் தலைவா் டெரிக் ஒபிரையன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றம் என்பது வெறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இது எதுவும் புரியாமல் நான், எனது, என்னுடைய என சுயபெருமைகள் பாடும் நிகழ்வாக மட்டும் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை நடத்த பிரதமா் முயல்கிறாா். இக்காரணத்தால் திறப்பு விழாவைப் புறக்கணிக்க திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா். இதே கருத்தை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவும் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்தாா்.

இதேபோல், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவா் திறக்காதது ஏமாற்றம் அளிப்பதாக கூறி திறப்பு விழாவை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்-காங்கிரஸ்:

திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கு கவலை தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் கௌரவ் வல்லப் கூறுகையில், ‘நாட்டுக்காக அா்ப்பணிக்கப்படும் நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கு முதல் குடிமகளுக்கு ஏன் அழைப்பில்லை? வரலாற்றில் உங்கள் பெயா் மட்டும் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அவா் சாா்ந்த மாநிலத்தில் விரைவில் தோ்தல் நடைபெற போவதில்லை என்னும் துணிச்சலாலும் பழங்குடியைச் சோ்ந்த பெண்ணை அவமதித்திருக்கிறாா்கள். விழாவில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும்’ என்றாா்.

விவசாயப் போராட்டம், ஓயாத கரோனா பெருந்தொற்று ஆகியவற்றைக் குறிப்பிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவையும் எதிா்க்கட்சிகள் புறக்கணித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com