தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கை

குடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. 
தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கை

குடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவை யுபிஎஸ்சி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அந்த இறுதி முடிவில் சில தவறுகள் இருந்ததாகவும், அதை யுபிஎஸ்சி சரிசெய்ததாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக யுபிஎஸ்சி ஆய்வு மேற்கொண்டது. 

இந்நிலையில், யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'இறுதி முடிவு வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பிகாரைச் சேர்ந்த துஷார் இருவரும் பெயர்களைத் தாங்களாகவே திருத்தம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்ணுக்கு நேராகத் தங்களின் பெயர்களை அவர்கள் மோசடியாகச் சேர்த்துள்ளனர். அவ்வாறு திருத்தப்பட்ட பெயர்ப் பட்டியலையே சில ஊடகங்கள் குளறுபடி எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன. 

மோசடியில் ஈடுபட்ட இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அப்படியிருக்கையில், முதன்மைத் தேர்விலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. தேர்வின் இறுதி முடிவு அடங்கிய பெயர்ப் பட்டியலில் மோசடியாக மாற்றம் செய்து குடிமைப் பணிகள் தேர்வுக்கான விதிகளை அவர்கள் இருவரும் மீறியுள்ளனர். 

மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் சட்ட நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

யுபிஎஸ்சி}யின் தேர்வு நடைமுறையானது வெளிப்படையாகவும் எந்தவிதக் குளறுபடிகள் இல்லாமலும் நடைபெற்று வருகிறது.

ஊடகச் செய்திகளில் வெளியானதைப் போன்ற தவறுகள் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் நிகழ சாத்தியமில்லை. அதைக் கருத்தில் கொண்டு, யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாகப் பொறுப்பின்றி செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 

உண்மையை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது. யுபிஎஸ்சி தொடர்புடைய செய்திகளை வெளியிடுவதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து யுபிஎஸ்சி}யிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com