கர்நாடகத்தில் பெண் அதிகாரி கொலையில் முன்னாள் கார் ஓட்டுநர் கைது

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த 45 வயது அரசு மூத்த புவியியலாளர் பிரதீமா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளி கிரண், பிரதீமா
கொலையாளி கிரண், பிரதீமா
Updated on
2 min read


பெங்களூரு: கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த 45 வயது அரசு மூத்த புவியியலாளர் பிரதீமா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பிரதீமா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.  முதற்கட்ட விசாரணையில், சந்தேகத்தின்பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முன்னாள் கார் ஓட்டுநர் கிரண், கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவல்துறை விசாரணைக்கு எடுக்க காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்.  ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநராக கிரண் பணியாற்றி வந்ததும், அவரை பிரதீமா கடந்த வாரம் பணிநீக்கம் செய்ததும் அந்த ஆத்திரத்தில் கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அண்மையில், சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கம் மற்றும் மணல் அள்ளும் கும்பலை இவர் கண்டுபிடித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் வீட்டில் தனியாக இருந்த போது கொலை செய்யப்பட்டிருந்தார்.

விதான சௌதா அருகே கோகுல் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது தளத்தில் வசித்து வந்த பிரதிமா கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் பணியாற்றி வந்த பிரதிமாவின் வீட்டில், வேறு எந்த பொருளும் திருடுப்போகவில்லை என்பதால், இது திட்டமிட்டக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி மூன்று பேரை கைது செய்திருந்தனர்.

சனிக்கிழமை முதல் அவர் செல்போனை எடுக்காததால், ஞாயிற்றுக்கிழமை காலை, பிரதீமாவின் சகோதரர் பிரதீஷ் வீட்டுக்கு வந்த போதுதான், கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

குடும்பத் தகராறு, சுரங்க மோசடி, பணியில் எதிராளிகள் போன்றவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள் கொலையாளி அத்துமீறி நுழையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு தெரிந்தவர்கள் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. 

இவரது கணவர் ஷிவ்மோகாவில் வசித்து வருகிறார். இவரது மகன் பள்ளியின் விடுதியிலேயே தங்கி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு அலுவலகக் காரில் வீட்டுக்கு வந்து இறங்கிய பிறகு இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையாளியிடம் நடத்திய விசாரணையில், புவியியல் ஆய்வாளர்களின் அதிரடி சோதனைகள் குறித்து சுரங்க மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் அளிப்பது, அரசின் மிக ரகசியத் தகவல்களை வெளியே சொல்வது போன்றவற்றில் கிரண் ஈடுபட்டுள்ளார். அவரை பிரதீமா பல முறை எச்சரித்தும், திருந்தாததால், கடந்த வாரம் பணியிலிருந்து நீக்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பிரதீமா வீட்டுக்குள் வருவதற்கு முன்பே, அவரது வீட்டுக்குள் நுழைந்து, பதுங்கியிருந்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.  கொலையாளியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com