
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திரசிங் தோமர் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக வெளியான விடியோ குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்.17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமர் சிலரிடம் நூற்றுக்கணக்கான கோடிகள் பேரம் பேசியதாக சமீபத்தில் விடியோ வெளியானது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகனும், வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளருமான தேவேந்திர சிங் தோமர் தொடர்புடைய மூன்று விடியோக்கள் இதுவரை வெளியாகி உள்ளன. ரூ.100 கோடி பரிவர்த்தனையில் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது ரூ.10,000 கோடி வரை வந்துள்ளது.
கடைசியாக வெளியான விடியோவில் போதைப் பொருள் கடத்தலில் அவருக்கு நேரடி தொடர்புள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரத்தை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் எது உண்மை, எது பொய் என்பது அனைவருக்கும் தெரியவரும்.
பாஜகவின் தேசியத் தலைவர்கள் அனைவரும் தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ளனர். ஆனால் தேசப்பாதுகாப்பு தொடர்புடைய இந்த விவகாரம் குறித்து ஒருவர் கூட வாய்திறக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். தேசநலனை விட தங்களின் சொந்த நலனே முக்கியம் என நினைக்கும் யாரையும் மத்தியப் பிரதேச மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் தேசநலன் முக்கியமா அல்லது தங்கள் கட்சியின் நலன்தான் முக்கியமா என பாஜகவின் உயர்மட்ட தலைவர்களிடம் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது மகன் தேவேந்திர சிங் தோமர் தொடர்பான பொய்யான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது எதிர்க்கட்சிகளின் சதி. தேர்தல் நேரத்தில் மக்களை இதன்மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.