உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் நிதின் கட்கரி

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், அம்மாநில முதல்வரும் நேரில் வந்தனர். 
உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் நிதின் கட்கரி

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இன்று (நவ.19) மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சாந்துவும் சில்க்யாரா பகுதியில் இருந்தார்.

மீட்பு பணிகள் குறித்துப் பேசிய உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதே எங்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். இதனால் மீட்பு படைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று கூறினார்.

நாங்கள் கிடைமட்டமாக துளையிட்டு அவர்களை மீட்க முயற்சித்தோம். தற்போது செங்குத்தாக துளையிடுவதற்கு முடிவு செய்துள்ளோம். சுரங்கப்பாதைக்கு மேலே ஒரு இடம் அடையாளம் காணப்பட்டு குறித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செங்குத்தாக சுமார் 300 - 350 அடி துளையிட்டு மீட்க உள்ளோம் என்று உத்தரகாசி மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்.

நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க எட்டு நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com